Published : 16 Jul 2018 08:29 AM
Last Updated : 16 Jul 2018 08:29 AM

எம்ஜிஆர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

எம்ஜிஆர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது என, வேல்ஸ் பல்கலை.யில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

பல்லாவரம் வேல்ஸ் பல்கலை.யில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எம்ஜிஆர் பல்கலை. ஆராய்ச்சி மைய வேந்தர் ஏ.சி. சண்முகம், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ், கவிஞர் வைரமுத்து, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:

சத்துணவு திட்டம்

தமிழகத்தில் எம்ஜிஆரின் ஆட்சிக்காலம், கல்வி வளர்ச்சியின் பொற்காலம். தமிழகத்தில் பலரின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர் அவரால் பலர் மருத்துவர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். அவர், சிறந்த தேசபக்தியாளர். அவரது, ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டம், தேசிய அளவில் பெயர் பெற்றது. இதனால், கல்வி அறிவில்லாத பெண்களும், வேலை வாய்ப்பு பெற்றனர். இத்திட்டத்தால், பள்ளிக் கல்வித் துறையில், மாநிலம் மாபெரும் வளர்ச்சி பெற்றது. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மதுரையில் உலக தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்ஜிஆர். இன்றும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் எம்ஜிஆர் சமாதிக்குச் சென்று அவரை வணங்குகின்றனர்.

எம்ஜிஆர் மற்ற மாநில முதல்வர்களுடனும், நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அதனால், தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் எளிதில் கிடைத்தது. இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகித்தார். மகாபாரத கர்ணன் போல எம்ஜிஆர் கொடை வள்ளலாக வாழ்ந்தவர்.

சென்ட்ரல் ரயில் நிலையம்

எம்ஜிஆர் பாடல்கள், படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட கோரிக்கை அளித்தீர்கள். அதை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது: தமிழகத்தில் நிலத்தடி நீரும், நன்றி உணர்வும் குறைந்து கொண்டே செல்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்தால், நாட்டில் வறட்சி ஏற்படும். நன்றி உணர்வு குறைந்தால், பண்பாட்டு வறட்சி ஏற்படும். எம்ஜிஆர் காலத்தில், தமிழின் வளர்ச்சி சிறப்பாக அமைந்தது. அவர், தமிழ் வளர்ச்சிக்காக, மதுரையில் செம்மொழி மாநாட்டை நடத்தினார். நான் கலைஞரின் மாணவன். ஆனால், எம்ஜிஆரின் தீவிர ரசிகன். எனினும், அவருக்கு பாட்டு எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

விழாவில், ‘வேர்களுக்கு வெளிச்சம்’, ‘என்ன செய்தார் துரைசாமி’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும், மாநாட்டுக்கான விழா தூணை ஆளுநர் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழா மாநாட்டுக்காக, கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலும் வெளியிடப்பட்டது. மேலும், எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி, நடிகர் பாக்யராஜ் உட்பட 15 பேருக்கு ஆளுநர் விருது வழங்கி கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x