Last Updated : 03 Jul, 2018 02:42 PM

 

Published : 03 Jul 2018 02:42 PM
Last Updated : 03 Jul 2018 02:42 PM

நேபாளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய சேலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியர்: உறவினர்கள் கவலை

கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரைக்கு சென்ற சேலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியரை மோசமான வானிலை காரணமாக தொடர்புகொள்ள முடியாததால் அவர்களது உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்றுள்ளனர். அவர்களில் 500 பேர் நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் நிலவும் மோசமான வானிலையில் சிக்கியுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 500 பேரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சேகர் (வயது 61) - கீதா (வயது 52) தம்பதியினர் 10 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையை சேர்ந்த டிராவல்ஸ் மூலமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றனர். தரிசனம் முடித்து அவர்கள் சிம்லாவை அடுத்த சிம்கோட் என்ற இடத்துக்கு திங்கள்கிழமை மதியம் வந்தனர்.

அவர்களை அதன் பின்னர் உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு கன மழை, கடும் பனிப்பொழிவு இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் உறவினர்கள் கவலையடைந்து உள்ளனர்.

இதனிடையே தமிழகத்திலிருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றுள்ள 23 பேர் சிமிகோட் எனுமிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், வானிலை சரியான பின்பு தமிழகம் வர நடவடிக்கை ஏடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x