Published : 24 Jul 2018 12:32 PM
Last Updated : 24 Jul 2018 12:32 PM

பொறியியல் படிப்புக்கும் நீட் வருகிறதா? முற்றிலும் நிராகரிக்க வேண்டும்: வேல்முருகன்

மருத்துவப் படிப்பில் நீட்டைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நேற்று முன்தினம் சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) துணைத் தலைவரான எம்.பி.பூனியா. அப்போது அவர், பொறியியல் படிப்புக்கும் 2019-ம் ஆண்டு முதல் நீட் வருகிறது என்று குறிப்பிட்டார்.

மருத்துவப் படிப்பில் நீட் திணிக்கப்பட்டு அதனால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் புறந்தள்ளப்பட்டிருப்பதையும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பே சிதையத் தொடங்கியிருப்பதையும் பார்க்கிறோம். இவை யாவும் நீட் வரும் பட்சத்தில் பொறியியல் கல்வித் துறையிலும் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.

மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல பொறியியல் கல்வியிலும் நாட்டில் முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புகளான 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளால் தகவல் தொழில்நுட்பம் உள்பட பொறியியல் தொழில்நுட்பத் துறை சிறப்புற்று விளங்குகிறது. இதனை ஒழித்துக்கட்டும் முயற்சியாகவே பொறியியல் படிப்புக்கும் நீட் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழக உயர்கல்வித் துறையை ஒழிக்க, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கைப்பற்றத் துடிப்பது ஒருபுறம் நடக்க, பொறியியலில் நீட்டைத் திணிப்பது அந்தத் துறையையே காலிசெய்யும் நோக்கிலானதாகும்.

நீட்டைக் கொண்டுவந்ததற்குக் காரணமே உலகத் தொழில்-வணிக அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கார்ப்பரேட்டுகளிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது தான். நீட் கோச்சிங் சென்டர் பாக்கெட்களை நாடு முழுவதும் வைத்து கார்ப்பரேட்டுகளின் கட்டணக் கொள்ளை கனஜோராக நடப்பதைப் பார்க்கிறோம். அதன் மூலம் வேதியலில் 0 மார்க் எடுத்த மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்ததையும் பார்த்தோம். இதனால் மருத்துவம் என்கின்ற உயிர்காக்கும் துறையே மாண்பை இழக்க நேரிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த நிலை பொறியியல் துறைக்கும் நேரிடாது என்பதற்கு என்ன நிச்சயம்?.

ஆகவேதான் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வியையும் ஒழித்துவிடுவதுடன், தகுதி என்ற அளவுகோலால் சமூக நீதியையே தாக்கிக் கொன்றுவிடும் இந்த நீட்டை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதில் நீதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்; முடக்கப்பட்ட நீட்-விலக்கு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்'' என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x