Published : 15 Jun 2018 05:17 PM
Last Updated : 15 Jun 2018 05:17 PM

ரம்ஜான் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

download 2jpg100 

இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனைத் தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, 2600 உலமாக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிருவாக மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தியது, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி உருவாக்கியது என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குவது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க அரசாணை வெளியிட்டது, மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றி வரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமிய மக்களின் வாழ்வு மேன்மையுற சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று வாழ்த்தி, அன்புக்குரிய இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.

மு.க.ஸ்டாலின், செயல் தலைவர், திமுக:

download 3jpg100 

தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் திமுக சார்பில் ஆற்றிய சாதனைகள் எண்ணிலடங்காதது.

இஸ்லாமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதை இஸ்லாமிய மக்கள் நன்கு உணருவார்கள். 1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருதுபேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும் பயனடையும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் ஆரம்பித்தது;ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதிலிருந்து 2400 வரை உயர்த்தியது; வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென முதன் முறையாக 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது திமுக.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று தொடங்கியது; 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கியது; 2001-ல் காயிதே மில்லத் மணிமண்டபம் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியது, கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது; பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 2007-ல் இஸ்லாமியர்களுக்கென 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது என திமுக தலைவர் கருணாநிதியின் இன்னும் பல சாதனைகளை வரிசையாகப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தொல்.திருமாவளவன், தலைவர், விசிக:

download 4jpg100 

சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அத்துடன், மனிதநேயத்தை செழுமைப்படுத்துவதன் மூலம் மதவாத வெறுப்பு அரசியலையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் வேரறுக்க இந்நாளில் உறுதியேற்போம்.

விஜயகாந்த், தலைவர், தேமுதிக:

download 5jpg100 

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளர், அமமுக:

dinakaranjpgjpg100  

தமிழகத்தில் தழைத்தோங்கிவரும் சகோதரத்துவம் என்றும் நிலைத்திடச் செய்யவும், இந்திய நாட்டின் மதச் சார்பற்ற கொள்கையைப் பாதுகாத்திடும் அரணாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் திகழ்ந்திடும். இந்நந்நாளில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளைத் தொடர்ந்து கடைபிடிப்போம், போற்றிடுவோம். உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் எனத் தெரிவித்து இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x