Published : 03 Jun 2018 08:01 AM
Last Updated : 03 Jun 2018 08:01 AM

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜூன் 8-ம் தேதி முதல் தொடர் பிரச்சார பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் 8-ம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் இருவரும் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாழ்வாதாரம் பறிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும், அதிமுக அரசும் திட்டமிட்டு இக்கொடுமையை நிகழ்த்தியுள்ளன.

மொத்த தமிழகத்தையே மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் என பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திட்டங்களை இரு அரசுகளும் அரங்கேற்றி வருகின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதோடு, விவசாயிகள், கிராமப்புற மக்கள், மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு எட்டாக்கனி

பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகியுள்ளது.

உணவுப் பாதுகாப்பு சட்டம் சீரழிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. காவிரி விவகாரத்தில் கடமைக்கு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள் ளது.

மார்க்சிஸ்ட் போராட்டம்

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கேள்வி கேட்க முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் மோசமான நடவடிக்கைகளால் நொறுங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

6 முனை பிரச்சாரம்

அதன் தொடர்ச்சியாக வரும் 8-ம் தேதி தமிழகத்தில் 6 முனைகளில் தொடங்கி பிரசார பயணம் திருச்சியில் வரும் 14-ம் தேதி நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x