Published : 06 Oct 2024 09:58 AM
Last Updated : 06 Oct 2024 09:58 AM
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டக் கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ள 15 சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 இடங்கள் காலியாக உள்ளன. 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாதது திமுக அரசின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நிலையில் எப்படி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும்.உயர் கல்வி சேர்க்கை மட்டும் இருந்தால் போதாது. தரமான உயர் கல்வியை தமிழக மாணவ, மாணவிகள் பெற வேண்டும். இதற்கு இன்றியமையாதது ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதுதான். ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடுவதே நல்லது என்று உயர் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, சட்டக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT