Published : 29 Jun 2018 10:02 PM
Last Updated : 29 Jun 2018 10:02 PM

லேட்டாக வந்ததால் ரெயிலில் தாவி ஏறிய பெண்: தண்டவாளத்தில் விழ இருந்த போது பாய்ந்து காப்பாற்றிய காவலர்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரெயில் ஏற வந்த பெண் ஒருவர் தாமதமாக சென்றதால் ரயில் கிளம்பியதை அடுத்து ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி விழ இருந்தவரை ரயில்வே போலீஸ் காப்பாற்றினார்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்(34). இவரது மனைவி பிரியா(28). இவர் நேற்றிரவு கேரளா செல்லும் ஆலபுழா ரெயில் செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தார்.

ரெயிலில் ஏறுவதற்காக குடும்பத்தாருடன் வீட்டிலிருந்து கிளம்பிய பிரியா ரெயில் புறப்படும் நேரத்திற்குள் ஸ்டேஷனுக்குள் வர முடியவில்லை. பின்னர் ரயிலை கண்டுபிடித்து 6 வது பிளாட்பாரத்தில் ரயில் நிற்பதை அறிந்து அங்கு சென்றார்.

அதற்குள் ரயில் புறப்பட்டு செல்ல துவங்கியது. இதைப்பார்த்த பிரியா வேகமாக சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவர் முன்னங்கால் படிகட்டிலிருந்து நழுவியதால் பெட்டியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு தொங்கினார். பிளாட்பாரத்திற்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் காலை ஊன்ற முடியாமல் தடுமாறினார்.

கைநழுவினால் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. இவை எல்லாம் சில விநாடிகளில் நடக்க பிரியாவின் நிலையை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பாண்டியராஜன் பாய்ந்துச்சென்று பிரியாவை அலேக்காக தூக்கி இழுத்து பிளாட்பாரத்தில் கிடத்தினார்.

ரயில் வேகமாக சென்றுவிட்டது. இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியால் உறைந்து நின்றனர். உயிரை காப்பாற்றிய பாண்டியராஜனுக்கு பிரியாவும், உறவினர்களும் நன்றி தெரிவித்தனர். அங்கிருந்த பொதுமக்களும் வாழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x