Last Updated : 18 Jun, 2018 09:30 AM

 

Published : 18 Jun 2018 09:30 AM
Last Updated : 18 Jun 2018 09:30 AM

அழிவின் விளிம்பில் ஸ்தல விருட்சங்கள்

தமிழகத்தில் கோயில்களில் அழிவின் விளிம்பில் உள்ள ஸ்தல விருட்சங்களை நவீன தொழில்நுட்பம் மூலமாக மீட்க தொல்லியல் துறை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் குல தெய்வங்கள், சிறிய, பெரிய அளவிலான கிராமத்துக் கோயில்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் ஸ்தல விருட்சம் எனப்படும் கோயில் மரம் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மரங்கள் அந்தந்த ஊர்களின் சூழலுக்கு ஏற்ப நோய்களைப் போக்குவதற்குரிய அபூர்வ மருத்துவ குணம் மிக்கவையாக முன்னோர்களால் பொதுக் கோயில்களில் ஸ்தல விருட்சங்களாக வைக்கப்பட்டன.

விஞ்ஞான அதிசயங்கள்

மேலும், நமது முன்னோர்கள் கோயில்களை நிர்மாணித்தபோது அதனுள் பல விஞ்ஞான அதிசயங்கள், மருத்துவ ரகசியங்களை இணைத்து மக்களுக்கு நலம் தரும் வகையில் அமைத்துள்ளனர். அவற்றில் ஒன்று ஸ்தல விருட்சம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல தகவல்கள், காரணங்கள் இதன் பின்புலத்தில் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு முன்னோர்களால் முக்கிய நோக்கில் வைக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் தற்போது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் மூன்றில் ஒரு பகுதி ஸ்தல விருட்சங்கள் காய்ந்து விட்டன. இது தொல்லியல் துறையால் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மூலமாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலமாக ஸ்தல விருட்சங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழக தொல்லியல் துறை.

மீட்பது அரசின் பணி

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் ‘தி இந்து’விடம் தெரிவித்ததாவது:

தமிழகக் கோயில்களில் உள்ள பல விருட்சங்கள் ஆயிரம் ஆண்டுகள் கூட பழமை வாய்ந்தவை. அவற்றின் பின்புலத்தில் வரலாற்றுத் தகவல்கள் பல உள்ளனஅறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் மூன்றில் ஒரு பங்கு ஸ்தல விருட்சங்கள் காய்ந்து விட்டன.

டிஎன்ஏ பரிசோதனை

அழிந்து வரும் ஸ்தல விருட்சங்களை மீட்பது அரசின் பணி என்றே கருதுகிறோம். முதலில் தொழில்நுட்ப உதவிகள் மூலமாக அவற்றின் தொன்மையை அறியவுள்ளோம். தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனை மூலமாக தாவரவியல் வகை அறிந்து அவற்றைத் தளிர்க்க வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஸ்தல விருட்சங்கள் குறித்த தகவல்கள் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அதில் ஸ்தல விருட்சங்கள் பற்றியுள்ள தகவல்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை தமிழ் பல்கலைக்கழகம் செய்யவுள்ளது.

நம்முடைய பண்பாட்டு வளத்தினை தக்க வைத்துக் கொள்வது நமது பொறுப்பு. ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் இப்பணியைத் தொடங்கவுள்ளோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x