Published : 26 Sep 2024 07:50 AM
Last Updated : 26 Sep 2024 07:50 AM

விசிக-திமுக இடையே எந்த சிக்கலும் இல்லை: திருமாவளவன் திட்டவட்டம்

கோவை / சென்னை: விசிக, திமுக இடையில் எந்த சிக்கலும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை, எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. எனது ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தைவிவாதத்துக்கு பலரும் எடுத்துக்கொண்டனர். அந்த விவாதம் மேலும் பல விவாதங்களுக்கு இடமளித்துவிட்டது. இதன் காரணமாக திமுக-விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது.

உதயநிதி குறித்து கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக, மூத்த தோழர்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை, முன்னணிப் பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி, அது தொடர்பான முடிவுகளை எடுப்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

திமுக பவள விழாவில்... சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: அக்.2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் மத்தியக் குழுஉறுப்பினர் உ.வாசுகி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மகளிரணித் தலைவர்கள், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், போதைப் பொருட்களை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநாட்டை நடத்துகிறோம்.

காஞ்சிபுரத்தில் வரும் 28-ம் தேதி நடைபெறும் திமுக பவள விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் விடுத்த அைழப்பை ஏற்று, பவள விழாவில் விசிக பங்கேற்கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல்களில், கட்சி நலன், கூட்டணி நலன், மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுப்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x