Published : 01 Jun 2018 07:57 PM
Last Updated : 01 Jun 2018 07:57 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஜூன் 4 அன்று விசாரணையைத் தொடங்குகிறார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி(ஓய்வு) அருணா ஜெகதீசன் வரும் திங்கட்கிழமை (ஜூன் 4) விசாரணையைத் தொடங்குகிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் போராடி வந்த பொதுமக்கள் 100-வது நாளான மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு 144 தடையை மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டையும், அது நடத்தப்பட்ட விதத்தையும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன. தேசிய அளவிலும் எதிர்ப்பு எழுந்தது. பரவலான எதிர்ப்பை அடுத்து தமிழக அரசு ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த மே 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 144 தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான நபர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசாரணை ஆணையம் அமைத்து ஒருவாரம் கடந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்க உள்ளதாக ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். வரும் 4-ம் தேதி முதல் அவர் விசாரணையைத் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை ஜூன் 4-ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தனது விசாரணையைத் தொடங்குகிறார். முதற்கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.

பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார். இது தவிர துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸார், அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணை தாசில்தார் உள்ளிட்டோர்களிடமும் விசாரணை நடத்துவார்.

இது தவிர அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடக்கும். விசாரணை காலகட்டம் மூன்று மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அல்லது மேலும் அவகாசம் கேட்டு பின்னர் தனது அருணா ஜெகதீசன் அறிக்கையை தாக்கல் செய்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x