Published : 01 Jun 2018 12:35 PM
Last Updated : 01 Jun 2018 12:35 PM

கச்சநத்தம் சம்பவம்; குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கச்சநத்தம் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை படுகொலை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அசம்பாவிதத்தில் 3 பேர் பலியாகியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த அசம்பாவிதத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறி சகஜ நிலை திரும்பினால் தான் அப்பகுதி மக்கள் நிம்மதியாக அன்றாட பணியை தொடர முடியும்.

மோதலில் ஈடுபட்ட இரு சமூகத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அந்த சமூகத்தினரிடையே நல்லெண்ண அடிப்படையில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பேச்சுவார்த்தை அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உயிரிழப்புக்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகளை எடுத்து பொது மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக இது போன்ற மோதல்கள் நடைபெறாமல் இருக்க சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திருவிழாவோ, பிற விஷேச நிகழ்ச்சியோ அல்லது பொது நிகழ்ச்சியோ நடைபெற்றால் அந்நிகழ்சி சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினையோ, மோதலோ, கலவரமோ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த மோதலின் போது தாக்குதலுக்கு உள்ளான பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வருத்தத்துக்கு உரியது.

அவர்களுக்கும் சிறப்பு சிகிச்சையை தொடர்ந்து அளித்து, குணமடைந்து வீடு திரும்பும் வரை தமிழக அரசு உதவிகரமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அனைத்து நல்ல முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு, மாநில மக்கள் நல்வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்போதும் அமைதியான ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x