Published : 16 Sep 2024 08:26 AM
Last Updated : 16 Sep 2024 08:26 AM
காஞ்சிபுரம்: திமுக செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன; எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா தெரிவித்தார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா வந்தார். அவர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அண்ணாவின் இல்லத்தையும் அவரது புகைப்படங்களையும் சுற்றிப் பார்த்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருக்கிறார். அவர் துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஸ்பெயின், அமெரிக்கா சென்றிருக்கிறார்.
2024-ம் ஆண்டில் தமிழகத்தில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதாகவும், மொத்தம் ரூ.6,63,180 கோடி மதிப்பிலான தொழில்கள் இங்கு வருவதாகக் கூறி இருந்தனர். அந்த தொழில்கள் மூலம் 14 லட்சம் பேருக்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும், மறைமுகமாக 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினர்.
இதுபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒப்பந்தம் போடுவதாக மட்டுமே கூறிவருகின்றனர். எவ்வளவு நிறுவனங்கள் வந்தன; எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்பதை கூற வேண்டும் என்றார். முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT