Published : 12 Sep 2024 08:51 PM
Last Updated : 12 Sep 2024 08:51 PM
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்.12) காலமானார். அவருக்கு வயது 72. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் - “இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவரான அவர், மாணவர் தலைவராக இருந்தபோது, அவசர நிலைக்கு எதிராக அவர் நின்றார். தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அவரது முற்போக்கு சிந்தனைகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். அவர் உடனான எனது நினைவுகளும்,பேச்சுகளும் எப்போதும் போற்றுதலுக்குரியவை.இந்த துயரமான தருணத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ.) - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன?, மதவெறியும், மதச்சார்பின்மையும் ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்களிப்புகளாகும். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.
தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர். தமிழகத்தில் பிறந்தவர் என்பதோடு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர். தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு பங்காற்றியவர். கட்சியின் மாநில மாநாடுகள், பல்வேறு அரசியல் சிறப்பு மாநாடுகளில் பங்கு கொண்டு உரையாற்றியவர். தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், மதச்சார்பற்ற இயக்கங்களுக்கும் மாபெரும் பேரிழப்பாகும். இந்தியா ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த இழப்பு இந்தியாவின் ஜனநாயக பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு பேரிழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) - “மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டுக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் பேரிழப்பாகும்,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் (பாமக) - “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.) - “2005-ம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இவரது மாநிலங்களவை உரை நவ தாராளமயக் கொள்கைகளின் சீரழிவையும், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்து நிகழ்வுகளையும் நாட்டின் கவனத்துக்கு எடுத்துக் கூறியவர். தோழர்களுடனும், நண்பர்களுடனும் நெருங்கி பழகும் பண்பு கொண்டவர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவிட் 19 நோய்த்தொற்றில் மகனை பறி கொடுத்தவர்.
சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்ட்களும் கடுமையான சவால்களையும் எதிர் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும், முனைப்பான செயலாற்றலும் ஒருசேரப் பெற்றுள்ள தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சுவரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது,” என்று கூறியுள்ளார்.
வைகோ (மதிமுக) - “இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர்.இவரது அறிவார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளும், நூல்களும், தீக்கதிர் ஏட்டில் வெளிவரும், பொதுச்செயலாளர் மேசையிலிருந்து என்ற பகுதியில் வெளிவரும் கருத்துக்களும் இவரின் எழுத்தாற்றலுக்குச் சான்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) - “தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தவும் பெரும் துணையாக இருந்தவர். காங்கிரஸ் தலைவர்களிடையே குறிப்பாக தலைவர் ராகுல்காந்தியிடம் மிகுந்த நெருக்கமான தோழமையை கொண்டிருந்தவர். இதன்மூலம் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மட்டுமின்றி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமாவளவன் (விசிக) - “ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச தாக்குதலை எதிர்த்தவர்கள் எல்லாம் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்திலும் அச்சமின்றி மோடி அரசின் அடக்கு முறையைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர். இண்டியா கூட்டணி உருவாகப் பாடுபட்டவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒருங்கிணைத்த ‘வெல்லும் சனநாயகம் மாநாட்டில்’ பங்கேற்று இறுதிவரை இருந்து உரை நிகழ்த்தினார். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். லட்சக் கணக்கான இளைஞர்களை வகுப்புவாத அரசியலை எதிர்த்து இப்படித் திரட்டுவது மிகப் பெரிய சாதனை என எங்களைப் பாராட்டினார் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரிக் கட்சிதான். நாம் இணைந்து செயல்படுவோம் என்று எங்களை ஊக்கப்படுத்தினார்” என்று பகிர்ந்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் (பாமக) - “இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி . தமக்கு மூத்தவரான பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றியவர். கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டிருந்த யெச்சூரி, தேசிய அளவில் கூட்டணிகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். அரசியலில் மேலும் பல உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால் தோழர் யெச்சூரி காலமானதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று பகிர்ந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்) - “தலைசிறந்த இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். மிகச் சிறந்த ஜனநாயகவாதி. தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர். மிகச்சிறந்த எழுத்தாளர். நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியதோடு, முக்கியப் பிரச்சினைகளில் தனது தரப்பு வாதத்தை ஆணித்தரமாக பதிவு செய்த பெருமைக்குரியவர் சீதாராம் யெச்சூரி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவரது மறைவு இந்திய நாட்டுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் இயக்கத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். 2005 முதல் 2017 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அவரது இறப்புச் செய்தி மிகவும் துயரமானது,” என்று தெரிவித்துள்ளார்.
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கட்சியை மிகச் சிறப்பாக நிர்வகித்தவர். அவரது மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பாகும்,” என்று கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன் (தமாகா) - “இந்திய அளவிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த முன்னோடிகளோடு இணைந்து பணியாற்றியவர். தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) இயக்கத்தின் நிறுவனத் தலைவரான ஜி.கே. மூப்பனாரோடு மிகுந்த அன்பு கலந்த பாசத்தோடு பழகியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாக அமைகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் (அமமுக) - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரியை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் (தவெக) - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT