Published : 01 Sep 2024 09:48 AM
Last Updated : 01 Sep 2024 09:48 AM
மேட்டூர்/தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து காவரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், மீண்டும் பரவலாகமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,349 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,396 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 13,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்
ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் 115.56 அடியாகவும், நீர் இருப்பு 86.56 டிஎம்சியாகவும் இருந்தது.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கும்.
இந்நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் தயாளகுமார் நேற்று மேட்டூர்அணையின் வலது கரை, இடதுகரை, 16 கண் மதகுகள், வெள்ளக்கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், படகில் சென்று அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி, அணை தடுப்புச் சுவர், திப்பம்பட்டி உபரி நீரேற்று நிலையப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நீர்வளத் துறைசெயற் பொறியாளர் அலுவலகத்தில், மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் அணை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், கால்வாய் பிரிவு உதவி செயற்பொறியாளர் மதுசூதனன், சரபங்கா வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 5,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT