Published : 25 Aug 2024 09:22 AM
Last Updated : 25 Aug 2024 09:22 AM

காவிரி உபரி நீரை சேமிக்க 32 புதிய திட்டங்கள்: பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் பரிந்துரை

திருச்சி: தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் `தண்ணீர் தன்னிறைவுத் தமிழகம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு திருச்சியில் நேற்று நடைபெற்றது.

திருச்சி மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.தயாளக்குமார் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். நடுக்காவிரி வடிநில வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.சிவக்குமார், அரியாறு வடிநிலக் கோட்ட செயற்பொ றியாளர் ஏ.நித்தியானந்தன் உள்ளிட்டோர், நீர்வளத் திட்டங்கள் குறித்துப் பேசினர்.

பின்னர், சங்கப் பொதுச் செயலாளர் அ.வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவு 1,200 டிஎம்சி. ஆண்டுக்கு 1,800 டிஎம்சி மழை பெய்கிறது. ஆனால், மழைநீரை சேமித்து வைக்க வசதியில்லை. 85 நீர்த்தேக்கங்களில் 75 சதவீதம் அளவுக்கு வண்டல் மண் தேங்கி உள்ளது. ஏரிகளின் கொள்ளளவு 390 டிஎம்சியிலிருந்து 250 டிஎம்சியாக குறைந்துள்ளது.

எனவே, நீர்த்தேக்கங்களில் வண்டல் மண்ணை அள்ளி, தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும். சொந்த செலவில் மண் அள்ள நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. வண்டல் மண் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம்கோடி வருவாய் கிடைக்கும். ஆறுகளில் மணல் அள்ளுவதையும் முற்றிலும் நிறுத்திவிடலாம்.

காவிரி உபரிநீரை பம்ப்பிங் செய்து வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டுசென்று, ஏரி, குளங்களைநிரப்புவதுடன், குடிநீருக்கும் பயன்படுத்தலாம். இதற்காக, மேட்டூர் அணை, ஜேடர்பாளையம் நீரொழுங்கி, மாயனூர் தடுப்பணை, முக்கொம்பு, கல்லணை, கொள்ளிடம் கீழணை ஆகிய இடங்களில்32 திட்டங்களைச் செயல்படுத்தினால், 32 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும். இதற்கு ரூ.36,500 கோடி நிதி தேவை.

முதல்கட்டமாக வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர்அணைகளில் 1.3 டிஎம்சி அளவுக்குவண்டல் மண் எடுத்து, ரூ.855 கோடிக்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதர அணைகளில் மண் அள்ளுவது, ஏரிகளில் தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் தமிழகம் நீர்வளம் மிகுந்த மாநிலமாகிவிடும். அப்போது, தண்ணீருக்காக பிற மாநிலங்களில் கையேந்த வேண்டியதில்லை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் நிறுத்திக் கொள்ளலாம்.

காவிரி உபரி நீரை சேமிக்கும் 32 புதிய திட்டங்களுக்கு தனிஆணையம் அமைத்து செயல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை 3 கட்டங்களாக ஒதுக்கீடுசெய்து, திட்டத்தை செயல்படுத்தலாம். தெலங்கானாவில் கோதாவரியிலிருந்து பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டுவந்து, 40 ஆயிரம் ஏரி, குளங்களில் நிரப்பி, 130 டிஎம்சி தண்ணீரை சேமித்துள்ளனர். அதேபோல, நாம் 32 டிஎம்சி தண்ணீரை எளிதில் சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x