Published : 24 Aug 2024 07:04 AM
Last Updated : 24 Aug 2024 07:04 AM
சென்னை: சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கமல்ஹாசன் பேசும்போது, "கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வெகு விரைவில் சில மாற்றங்களை கொண்டுவரவிருக்கிறேன். இதற்கான முன்னோட்டாம்தான் செயற்குழு கூட்டம்" என்றார். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில், தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். `நம்மவர் நூலகம்’ அமைக்க உதவும் கட்சித் தலைவர், கமல் பண்பாட்டு மையம், வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.மதுசூதன் ஆகியோருக்கு பாராட்டுகள். கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டமைக்கு பாராட்டு.
எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை அளிக்க வேண்டும்.
பருவமழையின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவற்றுக்கு தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்களை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மநீம நிர்வாகிகள் சிலர் கூறும்போது, "செயற்கை நுண்ணறிவு குறித்து படிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா செல்கிறார். அடுத்த மாத இறுதியில் அவர்பயணம் இருக்கும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT