Published : 16 May 2018 09:14 AM
Last Updated : 16 May 2018 09:14 AM

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி: பிரதமர் மோடிக்கு பழனிசாமி, ஓபிஎஸ் வாழ்த்து; எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் முகநூலில் வாழ்த்து

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சி மற்றும் நேர்மையான உழைப்புக்கு இத்தேர்தலில் விரும்பிய பலனை அளித்தது மட்டுமல்லாமல் உங்களது புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது’என்று கூறியுள்ளார்.

அமித்ஷாவுக்கு வாழ்த்து

அதுபோல பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கர்நாடக தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்காக எனது வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி, பாஜகவின் தென்னிந்திய அரசியல் நுழைவுக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உங்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாகப் பொறுப்பேற்கும் பாஜக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக காவிரி உரிமையை மீறாமல், அண்டை மாநிலமான தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யும் என்று நம்புகிறேன். விரைவில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் திறக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

சேதுராமன் வாழ்த்து

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடக சட்டசபைத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு அசுர பலத்தை மேலும் கூட்டியுள்ளது. கர்நாடகாவில் பாஜக வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமைதான். தமிழகத்திலும் அது போல பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரணியில் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் கர்நாடகம் போல தமிழகத்திலும் புதிய மாற்றம் ஏற்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x