Last Updated : 11 May, 2018 07:54 AM

 

Published : 11 May 2018 07:54 AM
Last Updated : 11 May 2018 07:54 AM

கோபத்தால் ‘செல்லம்’ மரித்த சோகம்

காதல் திருமணத்தில் பிறந்த செல்லப்பிள்ளையின் மரணத்துக்கு தந்தை செளபாவே காரணமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் சௌபா என்கிற சௌந்திரபாண்டியன்(55), காதல் திருமணம் செய்துகொண்டவர். ராஜபாளையம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார்.

இவரது நண்பரும், ஜூனியருமான ரவிபாண்டியனின் அக்காள்தான் லதா பூரணம்(55). அவர் மதுரை லேடி டோக் கல்லூரியில் படித்தார். அப்போது காதலாகி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். லதாவின் சொந்த ஊர், நெல்லை மாவட்டம் சீவலப்பேரி. அவர் சொல்லிதான் சீவலப்பேரி பாண்டி கதைக்கான கரு சௌபாவுக்குக் கிடைத்திருக்கிறது.

வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்கான அரசு ஒதுக்கீட்டின் கீழ், அவரது மனைவிக்கு சென்னையில் உதவிப் பேராசிரியை பணி கிடைத்தது. மகன் விபின் பிறந்தான்.

வேலை நிமித்தமாக மனைவி சென்னையிலும், கணவர் மதுரையிலுமாக வாழ்ந்தனர். இதுவே அவர்களிடையே ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும், முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளவில்லை.

பெண் விவகாரம்

இருவருக்குமே விபின் செல்லப்பிள்ளை என்பதால், மாற்றி மாற்றி இருவர் வீட்டுக்கும் போய் செலவுக்குப் பணம் வாங்கியிருக்கிறார். அளவுக்கு அதிகமான பணப்புழக்கம் காரணமாக, மது, போதை ஊசி, அடிதடி, பெண் விவகாரம் என்று பல பிரச்சினைகளில் சிக்கினார் விபின்.

வீட்டிலும் கண்டிப்பில்லாமல், காவல் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகாமல் அவரைப் பாதுகாத்ததால், இளம் வயதிலேயே ஒரு சமூக விரோதியைப்போல நடந்து கொள்ளத் தொடங்கினார் விபின் என்கின்றனர்.

சினிமாவும், காரும்..

சினிமா துறையைச் சேர்ந்த நண்பர் பகிர்ந்து கொண்டது:

சௌபா தன் மகனுக்கு விலை உயர்ந்த பைக், கார் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தார். ஒருமுறை காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி ஒருவர் இறக்க காரணமானார் விபின். அதில் இருந்து அவரைக் காப்பாற்றப் படாதபாடுபட்டார்.

பின்னர் ஒரு சமயம் பிஎம்டபிள்யு கார் கேட்டிருக்கிறார். ஆனால், சௌபா மறுத்திருக்கிறார். கோபத்தில் அப்பாவின் காரை வெறும் மூன்றரை லட்சத்துக்கு விற்றுவிட்டார் விபின்.

அப்போது நடந்த பிரச்சினையில், ‘35 ஏக்கர் தோட்டத்தை வித்து எனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடு’ என்று தகராறு செய்திருக்கிறார் விபின். ஆனால், தனது சொத்தை எல்லாம் ஏதோ அறக்கட்டளையின் பெயரில் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செளபா செய்வது அறிந்து விபின் ஆத்திரம் அடைந்துள்ளார். அதற்கும் சண்டை நடந்திருக்கிறது.

இப்படி அடிக்கடி நடந்த மோதல்களின் உச்சமே கொலையில் முடிந்திருப்பதாகத் தெரிகிறது. செல்லமாக வளர்த்த தன் பிள்ளை மரித்துப் போக தந்தையே காரணமாகி விட்டார்.

முதல்வராக பதவி உயர்வு

எழுத்தாளர் சௌபா மனைவி லதா பூரணன் மேட்டுபாளையத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றினார். கடந்த ஜனவரி மாதம் அவர் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவரது கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் (மே 9) மாலை போராசிரியை லதா பூரணத்துக்கு கல்லூரி முதல்வராக பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி உருக்கம்

சௌபாவின் மனைவி லதா பூரணத்துக்கு 2 தங்கைகளும், ஒரு தம்பியும் உள்ளனர். ஒரு தங்கையை என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை (ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்) திருமணம் செய்துள்ளார். இன்னொரு தங்கை தற்கொலை செய்துகொண்டார்.

விபின் கொலை குறித்து வெள்ளத்துரையிடம் கேட்டபோது, “நானும் காவல்துறையைச் சேர்ந்தவன் என்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை. லதாவின் இரண்டாவது தங்கை, தன் கணவர் கார் விபத்தில் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என் அண்ணி லதாவும் சென்சிட்டிவானவர். ஒரே ஆதரவான மகன் இறந்துவிட்டதால், அவருக்கு ஆறுதலாக இருப்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x