Published : 12 Aug 2024 07:37 AM
Last Updated : 12 Aug 2024 07:37 AM
சென்னை: ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த சர்வதேச அளவில்சதி நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட எக்ஸ் பதிவு உலக அளவில் பேசும் பொருளாகி உள்ளது. உலகின் பெரு நிறுவனங்களில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் என்றுகூறப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நிறுவனமான அதானி நிறுவனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
ஏற்கெனவே, அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் முழுமையாக நிராகரித்து இருக்கிறது.
இந்நிலையில் அதானி நிறுவனம்வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கியதாகவும், அதற்காக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவர்மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாகவும் ஹிண்டன்பர்க் கட்டுரைவெளியிட்டுள்ளது.
உள்நோக்கம் கொண்டவை: இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. உள்நோக்கம் கொண்டவை என செபி தலைவர் மாதவி புரி புச் கூறியுள்ளார். தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் எக்ஸ் வலைதள பதிவு மற்றும் கட்டுரையால் இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் சரிவை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு, அதானி மீது அவதூறுகளையும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கருத்துக்கு ஆதரவாகவும் செயல்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.
ஹிண்டன்பர்க் நிறுவன வலைதள பதிவு, கட்டுரைகளுக்குப் பின்னால் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த நினைக்கும் சர்வதேச சதி அமைப்புகள் இருப்பதற்கான வாய்ப்பு தெரிகிறது.
காங்கிரஸ் ஆதரிக்க கூடாது: உலகப் பொருளாதாரம் உள்ள மோசமான சூழ்நிலையில், இந்திய தொழில் நிறுவனங்கள் முன்னேற நினைக்கும்போது அதற்கு தடையாக செயல்படும் ஹிண்டன்பர்க் போன்ற சர்வதேச போலி ஏஜென்சி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதை நிறுத்த வேண்டும். ஹிண்டன்பர்க் ரிசர்ச் குறிப்பிட்டதுபோல இந்தியாவில் எந்த பெரிய சம்பவமும் நடக்கப் போவதில்லை. நடக்கவும் முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT