Published : 31 May 2018 05:29 PM
Last Updated : 31 May 2018 05:29 PM

கலெக்டர் கனவோடு வாழ்ந்து மறைந்த பிரீத்தி; பிளஸ்-1 தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்: எலும்பு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டும் விடாமுயற்சி

கோவை எலும்பு வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் விடாமுயற்சியால் படித்து கலெக்டர் கனவோடு வாழ்ந்து சில நாட்களுக்கு முன் உயிரிழந்த மாற்றுத்திறனாளி ப்ரீத்தியின் பிளஸ்-1 ரிசல்ட் நேற்று வந்தது. அதில் அவர் சிறப்பான மதிப்பெண் பெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரிக்கு பிறந்த குழந்தை ப்ரீத்தி. பிறக்கும் போது நன்றாக இருந்த பெண் குழந்தை, நாளாக ஆக வளர்ச்சி குறைந்ததை பார்த்து மருத்துவரிடம் கொண்டுச்சென்றபோது அவர் எலும்பு வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் புவனேஷ்வரி செய்வதறியாது திகைத்தார். ஆனால் குழந்தை ப்ரீத்தி கொஞ்சம் கூட பயப்படவில்லை. தனது நோயை விட அதை வெல்வதே முக்கியம் அதற்கு தேவை கல்வி என்பதை குழந்தை ப்ரீத்தி நன்றாகவே அறிந்திருந்தது.

சிறுமி ப்ரீத்தியின் போர்க்குணம் அவரது தாயாருக்கு நம்பிக்கையை ஊட்ட தனது அரவணைப்பின் மூலம் ஆதரவாக இருந்தார். ப்ரீத்தியின் ஆர்வம், படிப்பில் சூட்டிகையாக இருந்ததை பார்த்து ஆசிரியர்கள் அவரை ஊக்குவித்து ஆதரவளித்தனர்.

உடல்வளர்ச்சியின்மை காரணமாக வளர்ச்சி குறைந்து வந்ததால் நடக்கக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ப்ரீத்தியை எங்கு போனாலும் அவரது தாயாரே தூக்கிச் செல்வார். தாயின் அரவணைப்பு, ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக தன்னம்பிக்கையுடன் படித்த ப்ரித்தி கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 468 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினார்.

தான் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராக வாழ்வில் வருவேன் என்று உறுதிபட நம்பினார் ப்ரீத்தி. அவர் பிளஸ்-1 சேர்ந்தபோது அவர் படித்த பள்ளியில் காமர்ஸ் குரூப் இல்லை. ப்ரீத்தியின் உடல் நிலை மாவட்டம் விட்டு வெளியில் சென்று படிக்க முடியாத நிலை. அவரது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப்ரீத்தியின் பள்ளியில் கொண்டுவரப்பட்டது.

பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் முயற்சியால் இந்த ஆண்டு பிளஸ்-1 படிப்பை தொடர்ந்தார். ஊடகங்கள் அவரது முயற்சியை பாராட்டி பதிவு செய்தபோது தான் கலெக்டர் ஆவது நிச்சயம் என்று தெரிவித்தார்.

ஆனால் தன்னால் படிப்பைத் தொடர்ந்து வெற்றி பெறுவேன் என்று மனதளவில் உறுதியாக நம்பினார். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. நாளுக்கு நாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ப்ரீத்தியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்கள் உதவியுடன் கடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினார். அப்போதே அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

கடுமையாக படித்து தேர்வை எழுதிய ப்ரீத்தியின் உடல்நிலை அவரது மன உறுதியை தாண்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரது உடலில் எலும்பு வளர்ச்சி முற்றிலும் நின்று போனது. இதன் பின்னர் அதிக நாட்கள் உயிர்வாழ்வது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் பெற்றோர் கலங்கி போகினர்.

வாழ்க்கையில் கல்வி ஒன்று மட்டுமே தன்னை உயர்த்தும், ஊனம் ஒரு தடையே அல்ல நிச்சயம் படித்து கலெக்டர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ப்ரீத்தி உடல் ஒத்துழைக்காத நிலையில் கடந்த மே.18-ம் தேதி உயிரிழந்தார்.

15 வயது சிறுமி ஒன்றரை அடி மட்டுமே வளர முடிந்த நிலையில் நடக்க கூட முடியாத நிலையில் மனதில் மட்டும் வைராக்கியத்தோடு வாழ்ந்தவர் மரணம் அவருக்கு ஒரு வகையில் துன்பத்திலிருந்து விடுவிப்புத்தான், என்றாலும் பெற்றோர், ஆசிரியரால் அவரது மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ப்ரீத்தி கடைசியாக நம்பிக்கையுடன் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதை பார்த்த பெற்றோரும், ஆசிரியரும் கதறி அழுதனர். பொதுத் தேர்வு முடிவுகளில் ப்ரித்தி 471 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். தமிழில் 93 மதிப்பெண்ணும், அக்கவுண்டன்சியில் 94 மதிப்பெண்களும், கணினி அறிவியலில் 88 வணிகக்கணிதத்தில் 74 என நோயின் தாக்கத்திலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .

ப்ரித்தியின் உடல் ஒத்துழைத்திருந்தால் 15 வயது சிறுமிக்கு இருந்த மன உறுதியில் நிச்சயம் ஒரு ஐஏஎஸ் அலுவலராக ஆகியிருப்பார். தடைகளை கடந்து சாதிக்கத் துடித்த ஒரு சிறுமியின் போராட்டத்தை இயற்கை பாதி வழியில் நிறுத்திவிட்டது சோகமான நிகழ்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x