Published : 04 May 2018 06:52 AM
Last Updated : 04 May 2018 06:52 AM

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். சென்னை, வேலூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற் கிறார்.

சென்னை, வேலூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதல்வர்கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முப்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். அங்கு சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் பகல் 12 மணிக்கு பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் சிறுநீரக மாற்று, இதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். குடியரசுத் தலைவருடன் ஆளுநர் புரோஹித்தும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

வேலூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 5.40 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் குடியரசுத் தலைவர் சென்னை திரும்புகிறார். இன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது முக்கிய பிரமுகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை காலை 10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நூற்றாண்டு கடந்த வைரவிழா மற்றும் 160-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை, வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 3 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x