Published : 07 Jul 2024 09:23 AM
Last Updated : 07 Jul 2024 09:23 AM

காவிரி படுகையில் அகழாய்வு செய்ய வேண்டும்: மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கருத்து

அமர்நாத் ராமகிருஷ்ணன்

மதுரை: காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால், நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கீழடி அகழாய்வில் முருகன், சிவன் உருவச் சிலைகள் கிடைக்கவில்லை. அங்கு குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் சுடுமண் பொம்மைகளே கிடைத்துள்ளன. அவற்றை மதங்களின் அடையாளமாகப் பேசுவது தவறு.அந்தக் காலத்தில் மதக் கோட்பாடுகள் கிடையாது.

கீழடி அகழாய்வுப் பரப்பை இன்னும் அதிகரித்தால், கூடுதல் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும். மத்திய தொல்லியல் துறைசார்பில் நடந்த கீழடி முதலாம்,இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை வெளியிடுவது தொடர்பாக மத்தியதொல்லியல் துறை இயக்குநரகம்தான் முடிவெடுக்க வேண்டும். கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை சென்னையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பின்படி, தொல்லியல் துறை இயக்குநரக அதிகாரிகள் உரிய முடிவெடுப்பர்.

மதுரை மாவட்டம் கொந்தகையில் உள்ள ஈமத்தாழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை டிஎன்ஏ சோதனை செய்தால், சம்பந்தப்பட்ட மனிதனின் வயதை அறிந்துகொள்ளலாம்.

இதுவரை ஈமத்தாழிகள் புதைத்த இடங்களைத்தான் ஆய்வுசெய்துள்ளோம். மனிதன் வாழ்ந்த வாழ்விடப் பகுதியை ஆய்வு செய்யும்போதுதான், மனித வரலாற்றைக் கணிக்க முடியும். காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால், நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x