Published : 28 Jun 2024 06:16 AM
Last Updated : 28 Jun 2024 06:16 AM
சென்னை: மக்களவையில் நிறுவப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி எம்.பி.,யின் கருத்தில் திமுகவின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என தமிழகபாஜக, தமாகா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை விளக்கும்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர்ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோல் அகற்றப்பட வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி பேசியிருக்கிறார். இதுதான் இண்டியா கூட்டணியின் நிலைப்பாடா என்பது குறித்து திமுக தெரிவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆதீனங்களை அவமதிப்பாக அவரது பேச்சு இருக்கிறது.
இத்தகைய கருத்தை அவர் கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு பேசிய சாம் பிட்ரோடாவுக்கு, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இண்டியா கூட்டணியினர் தென்னிந்தியர்கள் மற்றும் நமது கலாச்சாரத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: செங்கோல் பற்றி சமாஜ்வாதி எம்.பி. கூறிய கருத்துகள், செங்கோல் என்பதன் பொருள் புரியாமல் ஆங்கிலேய அடிமைகளின் பொது புத்தியில் பொதிந்துபோன கசடுகள் மட்டுமே. நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் என எதுவும் அறியாத முன்னாள் பிரதமர் நேருவின் வழியில் வந்தவர்களால் இப்படிதான் பேச முடியும். இந்த கருத்து ஏற்கத்தக்கது என கூறிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூருக்கும், ஜனநாயக நாட்டில் செங்கோலின் பங்கு ஏதுமில்லை என தெரிவித்த திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் கண்டனங்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: செங்கோல் என்பது நேர்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும், நடுநிலைமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது. அப்படி இருக்கும் போது செங்கோலை இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி அகற்றக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மரபின் செங்கோல் இந்திய சுதந்திரத்துக்கும், நல்லாட்சிக்கும் ஆதாரம் என்று தமிழர்கள் உணரும்போது, இண்டியாகூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும், திமுகவும் செங்கோலுக்கு எதிரானசமாஜ்வாதி கட்சியின் கருத்தை ஏற்றுக்கொள்கிறதா? என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT