Published : 13 Jun 2024 05:34 AM
Last Updated : 13 Jun 2024 05:34 AM
ராமேசுவரம்: கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்று 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்திய ராணுவம்சார்பாக தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து டெல்லி வரையிலான பைக் பேரணி நேற்று தொடங்கியது.
காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999-ல் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அப்போது இந்திய ராணுவம் `ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் ராணுவத்தை கார்கில் பகுதியிலிருந்து விரட்டி அடித்தது. கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்த நாள், ஒவ்வோர் ஆண்டும்ஜூலை 26-ம் தேதி கார்கில் விஜய்திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
25 ஆண்டுகள் நிறைவு: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்களும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இந்திய ராணுவம் சார்பாக ராமேசுவரம் அருகேதனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து பைக் பேரணி நேற்றுதொடங்கியது. மேஜர் ஜெனரல்ஆர்.எம்.ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலை வகித்தார்.
மொத்தம் 10 ராணுவ வீரர்கள்கொண்ட இக்குழுவினர், தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து மதுரை, பெங்களூரு வழியாக 4,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து, டெல்லியைச் சென்றடைகின்றனர்.
பின்னர், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து பைக் பேரணி மேற்கொண்டு வரும் வீரர்களுடன் சேர்ந்து, டெல்லியில் உள்ள போர் நினைவகத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT