Published : 15 May 2018 13:37 pm

Updated : 15 May 2018 19:32 pm

 

Published : 15 May 2018 01:37 PM
Last Updated : 15 May 2018 07:32 PM

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.


'மெர்க்குரிப்பூக்கள்' மூலம் ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டவர் எழுத்தாளர் பாலகுமாரன். 'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என 300க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டார்.

இவரின் எழுத்துக்களும் சொல் ஆளுமையும் சொல்லில் இருக்கிற தாளமும் படிப்போரைக் கட்டிப்போடும். படிப்பதுடன் மட்டுமின்றி, அவர்களை சிந்திக்கத் தூண்டும். எழுத்தாளர் பாலகுமாரன் படித்தேன். திருந்தினேன் என்று சொல்லும் வாசகர்கள் ஏராளம்.

இவரின் வாசகர்கள் பலரும், இவரை ஓர் எழுத்தாளராகப் பார்க்கவில்லை. தகப்பனாகவே பார்த்தார்கள். ஞானத்தகப்பன், குரு என்றும் கொண்டாடினார்கள்.

ஒரு நல்ல கணவனாக இருக்கிறேன் என்றால், அதற்கு அகல்யா படித்ததுதான் காரணம். அதில் உள்ள சிவசு கதாபாத்திரம்தான் காரணம் என்று நெகிழ்ந்து சொன்ன வாசகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமர்நேரிதான் பாலகுமாரனுக்குச் சொந்த ஊர். ஆனால் சென்னையில்தான் படித்து வளர்ந்தார். டாஃபே நிறுவனத்தில் 17 வருடங்கள் வேலை பார்த்தார். எழுத்தின் மீது கொண்ட காதலாலும் சினிமாவுக்குள்ளும் நுழைய நினைத்தார். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். 'சிந்து பைரவி', 'புன்னகைமன்னன்' முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கினார்.

ஆரம்ப கட்டத்தில் 'சாவி' பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆடிப்பெருக்கு பற்றி இவர் எழுதிய கட்டுரையும் நடிகை ஷோபா மரணம் குறித்த கட்டுரையும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அதையடுத்து 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்' முதலான ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார் பாலகுமாரன்.

'அன்பு. இதுவே என் கதையின் பிரதானம். இதுவே எல்லோருக்க்கும் தேவையாயும் போதுமானதாகவும் இருக்கிறது. இது இருந்தாலே, கிடைத்துவிட்டாலே சமூகம் அழகாகிவிடும். மனிதர்கள் நிம்மதியாய் வாழ்வார்கள்' என்பதையே தொடர்ந்து தன் எழுத்துக்களிலும் நாவல்களிலும் பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார்.

ராஜராஜ சோழன் குறித்தும் தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதிய 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல், வாசகர்களால் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எல்லோரும் உடையார் படித்துவிட்டு கொண்டாடினார்கள்.

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். இரண்டு முறை பைபாஸ் செய்யப்பட்டும் கூட, சோழ தேசம் முழுவதும் பயணித்து நிறைய கதைகளை, படைப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால், எழுத்தையை தவமாகக் கொண்ட பாலகுமாரன், தவமிருந்து எழுத்துக்களைப் படைத்த பாலகுமாரன் தன் எழுத்துக்களால் சூரிய சந்திரர்கள் உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருப்பார்.

எழுத்துக்கு எப்போதும் மரணமில்லை. எழுத்தாளருக்கும்தான்!

தவறவிடாதீர்!


    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x