Published : 09 Jun 2024 08:22 AM
Last Updated : 09 Jun 2024 08:22 AM

பாஜக புதுச்சேரி மாநில தலைவருக்கு எதிராக முன்னாள் தலைவர் போர்க்கொடி

சாமிநாதன்

புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் தற்போதைய அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதிதான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, அனைவரின் ஒருமித்த கருத்துடன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் பணியாற்றி, தேசியத் தலைவர் ஆதரவுடன், புதுச்சேரி சட்டபேரவைக்கு 6 எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு கிடைத்தனர். அதனால் புதுச்சேரி மாநில கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. அரசின்பல்வேறு துறைகளில் காலியாக இருந்த பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்பட்டன.

இந்நிலையில், எந்த அனுபவமும் இல்லாமல், திடீரென்று புதுச்சேரி மாநில கட்சித் தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி, தன்னுடைய மோசமான நிர்வாகத்தால், காலங்காலமாக பாஜகவுக்கு சித்தாந்த ரீதியாக செயல்பட்ட, பல அனுபவமிக்க நிர்வாகிகளை நீக்கிவிட்டு,கிளை மற்றும் கேந்திரத்தை கலைத்துவிட்டு, சுயநலத்தோடு தன்னுடைய சொந்த நிறுவனம்போல கடந்த 6 மாதங்களாக கட்சியை தவறாக வழி நடத்தி வந்தார்.

இதனால், ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் (நமச்சிவாயம்) தோற்கடிக்கப்பட்டார். இதற்கு புதுச்சேரி தலைவர் செல்வகணபதியே காரணம். இதற்கு அவர் பொறுப்பேற்று,பாஜக மாநிலத் தலைவர் பதவியைராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், தோல்வி தொடர்பாக தேசிய தலைமை ஆய்வு செய்யவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில்பல தலைவர்கள், பல தியாகங்களை பாஜகவை படிப்படியாக வளர்த்தனர். ஆனால், கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றாமல், குறுக்கு வழியில் நியமன எம்எல்ஏ,ராஜ்யசபா உறுப்பினர், மாநிலப் பொருளாளர், மாநிலத் தலைவர் என பலனை அனுபவித்துவிட்டு, ஒட்டுமொத்த கட்சிக்கும் துரோகம் செய்துள்ளார். ஆகவே, மாநிலத் தலைவரை உடனடியாக மாற்ற, தேசிய தலைமை முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மாநிலத் தலைவர் செல்வகணபதியிடம் கேட்டபோது, "சாமிநாதன், அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார். நான் தற்போது கட்சித் தலைமை அழைப்பின் பேரில், அகில இந்திய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ளேன். பின்னர் பதில் அளிக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x