Published : 04 May 2018 01:17 PM
Last Updated : 04 May 2018 01:17 PM

கோயம்பேட்டில் திருடிவிட்டு வீடு திரும்பிய கொள்ளையர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

கோயம்பேட்டில் வீடுபுகுந்து திருடிவிட்டு கடமை முடிந்த நிம்மதியுடன் வீடு திரும்பிய கொள்ளையர்கள் பாரிமுனையில் வாகன சோதனையில் சிக்கினர்.

கோடைக்காலம் தொடங்கியதால் காற்று இல்லை என கதவை திறந்து வைத்து தூங்குபவர்கள், மொட்டைமாடியில் தூங்குபவர்கள் என பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து திருடும் நபர்கள் அதிகரிப்பது வழக்கம்.

இதைத்தடுக்க போலீஸார் கூடுதலாக ரோந்து வருவார்கள். இதே போன்று நேற்று ஒரு சம்பவத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கள் வேலையை காட்டியுள்ளனர்.

சென்னை கோயம்பேடு ஐயப்பன் நகரில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் தனது வீட்டில் காற்று வரவில்லை என்று வீட்டை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.

எந்த வீடு திறந்திருக்கிறது உள்ளே புகுந்து திருடலாம் என பாரிமுனையைச் சேர்ந்த பவுல்ராஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் நோட்டமிட்டபடி வந்துள்ளனர்.

அவர்களுக்கு தோதாக மாரிமுத்துவும் வீட்டை திறந்து வைத்து தூங்குவதை பார்த்தவுடன் ஆகா, நாம் தேடி வந்த இடம் இதுதான் என வீட்டுக்குள் சத்தமில்லாமல் புகுந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்தவர்களை தொல்லைப்படுத்தாமல் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் வீட்டின் பீரோவை சத்தம் போடாமல் திறந்து உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகையையும், ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் வெளியே வந்தனர். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டுக்கு திரும்பலாம் என வீடு நோக்கி பாரிமுனை நோக்கி சென்றுள்ளனர்.

திருடிய நகைகளை காலையில் விற்று காசாக்கலாம் என்று சந்தோஷமாக பாரிமுனை வரை வந்தவர்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீஸாரை கவனிக்க வில்லை. போலீஸார் அவர்களை மடக்கி சாதாரணமாக விசாரித்துள்ளனர்.

ஆனால் இருவரும் ’ ‘இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ படத்தில் வரும் பட்டி பாபு, பெயிண்டர் ராஜேந்திரன் போல முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். எங்கிருந்து வருகிறாய் என்றால் வேலை முடித்து என்று ஒருவன் சொல்ல, ஊரிலிருந்து என்று ஒருவர் கூறியுள்ளார்.

எந்த இடத்திலிருந்து வருகிறாய் என்று கேட்டபோது எழும்பூரிலிருந்து என்று ஒருவர் சொல்ல கோயம்பேட்டிலிருந்து என்று ஒருவர் கூறியுள்ளார்.

போலீஸார் சந்தேகப்பட்டு அவர்கள் பையை சோதித்தபோது அதற்குள் கோயம்பேட்டிலிருந்து திருடி வந்த நகை, பணம் இருந்துள்ளது. உடனடியாக போலீஸார் அவர்களை பிடித்து விசாரிக்கும் போதே பால்ராஜ் உடன் வந்தவர் ஓடிவிட்டார். பின்னர் வடக்கு கடற்கரை போலீஸார் பிடிபட்ட பவுல்ராஜை காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தபோது கோயம்பேட்டில் மாரிமுத்து வீட்டில் திருடியது தெரியவந்தது.

தப்பி ஓடிய பவுல்ராஜின் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட நகையையும் பணத்தையும் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரிடம் வடக்கு கடற்கரை போலீசார் ஒப்படைத்தனர். பால்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x