Published : 05 Jun 2024 09:25 AM
Last Updated : 05 Jun 2024 09:25 AM
சென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி, குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை ஆதரித்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழகமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
இம்முறை, நமது மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும்காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி, ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நல்லாட்சியை வழங்கியிருக்கிறார். நாட்டின் உட்கட்டமைப்பு, விவசாயம், சாமானிய மக்கள், பெண்கள், இளைஞர் மேம்பாடு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல், அனைத்துப் பலன்களும் நேரடியாக மக்களைச் சென்றடைய வழிவகை செய்திருக்கிறார்.
மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும். தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.
தேர்தலில் தன்னலமின்றி உழைத்த தமிழக பாஜக சொந்தங்கள், தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT