Last Updated : 08 Apr, 2018 09:12 AM

 

Published : 08 Apr 2018 09:12 AM
Last Updated : 08 Apr 2018 09:12 AM

காவிரி பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால் தமிழ்நாடே குலுங்கும் வகையில் போராட்டம்: திருச்சியில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியபோது ஸ்டாலின் எச்சரிக்கை

காவிரி பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால், தமிழ்நாடே குலுங்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ‘காவிரி உரிமை மீட்பு பயணம்’ திருச்சி முக்கொம்பில் நேற்று தொடங்கியது. பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி உரிமையை மீட்பதற்காக 2 கட்டங்களாக இப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்ட பயணம் முக்கொம்பில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயணம் வரும் 9-ம் தேதி (நாளை) அரியலூரில் தொடங்குகிறது. இருகட்ட பயணமும் கடலூரில் சங்கமிக்கிறது.

நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்போம்

இப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இது முடிவடைவதற்கு முன்பே ஏப். 9-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட உள்ளது. அப்போது, நாமெல்லாம் மகிழ்ச்சியடையும் வகையில், எதிர்பார்க்கும் வகையில் ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்குவதற்கான சூழல் ஏற்படும் என நம்புகிறோம். அப்படி ஏற்படவில்லை என்றால், நாம் நடத்தக்கூடிய இந்த எழுச்சி பயணத்தை இன்னும் விரிவாக்கி, தமிழ்நாடே குலுங்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

காவிரி பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஆளும்கட்சியுடன் கைகோர்த்து செயல்படுவதில் நாங்கள் கவுரவம் பார்க்க விரும்பவில்லை. அரசியல் நோக்கத்தில் இந்த பயணத்தையும் நடத்தவில்லை. நம்முடைய உரிமையை முறையோடு பெறுவதற்கான பயணம்தான் இது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்நாடக மாநில அரசு வெளிப்படையாகவே தெரிவித்தது. மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரும் இதே கருத்தையே தெரிவித்தனர். இதைக் கண்டிக்கும் தைரியம்கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு இல்லை.

ஒட்டுமொத்த ராஜினாமா

அதிமுக, திமுகவின் எம்பிக்கள், அனைத்து எம்எல்ஏக்கள் மொத்தமாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம் என கூறினோம். இதற்கான முயற்சியில் துளி அளவுகூட அவர்கள் ஈடுபடவில்லை.

இதற்கு பிறகுதான், எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காவிரி உரிமை மீட்பு பயணம் முடிவதற்குள், பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நடைபயணத்தை வாழ்த்தி பேசினர்.

அதைத்தொடர்ந்து முக்கொம்பு சுற்றுலாத் தலத்தின் வாசல் அருகே நடைபயண நினைவுக் கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். பின்னர் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டார். அவருடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

பின்னர் ஜீயபுரம், அல்லூர், கம்பரசம்பேட்டை, திருச்சி மெயின்கார்டுகேட், பழைய பால்பண்ணை சந்திப்பு, வேங்கூர் வழியாகச் சென்ற நேற்றைய பயணம் கல்லணையில் முடிவடைந்தது. பயணத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த இடங்களில், மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.

மாரடைப்பால் பிரமுகர் பலி

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் நேற்று பங்கேற்ற, திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளர் சீமானூர் பிரபு (47), முக்கொம்பில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x