Published : 03 Jun 2024 06:20 AM
Last Updated : 03 Jun 2024 06:20 AM
சென்னை: சென்னை சத்யா நகர் காமராஜர் தெருவை சேர்ந்த 17 வயது மாணவர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 செல்ல இருக்கிறார். அதேபள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அவரது நண்பருக்காக 10-ம் வகுப்பு படித்து முடித்த சான்றிதழை (போனஃபைட்) வாங்குவதற்கு, கடந்த 31-ம் தேதி காலை அப்பள்ளிக்கு சென்றுள்ளார். உடன் படிக்கும் 2 பேரை அழைத்துக் கொண்டு, மொத்தம் 4 பேர் சென்றுள்ளனர்.
அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்காமல், அண்ணா சாலையில் உள்ள ஒரு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாட புத்தகங்களை சரக்கு வாகனத்தில் சென்று எடுத்து வருமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரித்துள்ளனர். ஆனாலும், அந்த தலைமை ஆசிரியர் மாணவர்களை கட்டாயப்படுத்தி சரக்கு வாகனத்தில் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, மாணவர்கள் அந்த சரக்கு வாகனத்தில் சென்று, அந்த வாகனம் முழுவதும் புத்தகங்களை ஏற்றி, அதே வாகனத்தில் மீண்டும் பள்ளிக்கு வந்து, பள்ளி வளாகத்தில் புத்தகங்களை இறக்கி வைத்துள்ளனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்ததால், தலைமை ஆசிரியரிடம் உணவு வாங்கி தரும்படி கேட்டுள்ளனர். ஆனால், அவர் உணவு வாங்கி கொடுக்காமல், மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சல் அடைந்த அந்த மாணவர்கள் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றுவிட்டார்.
ஆனால் பணப் பலன்கள் எதுவும் மாநகராட்சியால் விடுவிக்கப்படவில்லை என்றார். இந்நிலையில் அவர் மீது எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறியிடம் கேட்டபோது, ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை நாளை (இன்று) நேரில் விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT