Published : 16 May 2024 05:40 AM
Last Updated : 16 May 2024 05:40 AM

இளைஞரணியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது

சென்னை: திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

மக்களவை பொதுத் தேர்தல் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே, இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, இளைஞரணியின் புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல வாரியாக அறிந்து கொள்ளும் நோக்கில், சென்னை, அந்தமான் உட்பட முதல் மண்டலம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அடங்கிய 2-வது மண்டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில், அடுத்த கட்டமாக 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்றும், நாளையும் சென்னை அன்பகத்தில் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், இன்று மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் நாளை மாலை பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல், அதில் பதிவு செய்யப்பட்ட விவரங்களையும் ஆய்வு செய்கிறார். கட்சிப் பணிகள் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகள், படங்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் உதயநிதி ஸ்டாலின், சரியாக பணியாற்றாத நிர்வாகிகளை கட்சிப்பணியில் இருந்து அகற்றவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று வெளியாகும் முடிவுகள் அடிப்படையில், சரியாக செயல்படாத நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதே கருத்து இளைஞரணியிலும் எதிரொலித்தது.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே, அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இளைஞரணியில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x