Published : 16 May 2024 05:30 AM
Last Updated : 16 May 2024 05:30 AM

கிண்டி ஐடிஐ-ல் சேர மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: கிண்டி ஐடிஐ-ல் சேர மாணவர்களுக்கு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிண்டி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் இண்டஸ்ட்ரீ 4.0 தரத்தில் தொடங்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்குத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவற்றில் 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். ஆண்களுக்கு 40 வயது என்னும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சியின் போது மாதந்தோறும் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி, தொழிற்சாலைகளில் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படும்.

கல்வி கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலோ, கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகியோ ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2250 1350 என்ற தொடர்பு எண்ணை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x