Last Updated : 10 May, 2024 04:48 PM

 

Published : 10 May 2024 04:48 PM
Last Updated : 10 May 2024 04:48 PM

10 ஆம் வகுப்பு முடிவுகள்: புதுச்சேரி, காரைக்காலில் 89.14 % தேர்ச்சி - முழு விவரம்

புதுச்சேரி | கோப்புபடம்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பு தேர்வில் 89.14 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 0.84 குறைந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடந்து முடிந்தது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பு தேர்வில் 89.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் - 7,590, மாணவிகள் - 7,362 என மொத்தம் 14,952 பேர் தேர்வு எழுதினர்.

இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் - 6,527, மாணவிகள் 6,081 என மொத்தம் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 89.14 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.02 சதவீதம் அதிகரித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 85.99 சதவீதமும், மாணவிகள் 92.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகள் 6.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளில் ஆண்கள் - 2,924, பெண்கள் - 3,099 என 6,023 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் - 2,086, பெண்கள் - 4,703 என 4,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 181 தனியார் பள்ளிகளில் ஆண்கள் - 4,666, பெண்கள் - 4,263 என மொத்தம் 8,929 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் - 4,441, பெண்கள் - 4,184 என 8,625 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 81.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை விட 0.14 சதவீதம் குறைவாகும். இதேபோல், காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகள் 65.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 2.75 சதவீதம் குறைவு ஆகும்.

மொத்தமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.08 சதவீதம் ஆகும். கடந்தாண்டு அரசு பள்ளிகள் 78.92 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதனை ஒப்பிடுகையில் இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 0.84 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம், 181 தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.60 சதவீதம் ஆகும். கடந்தாண்டு 95.61 சதவீதம் தேர்ச்சிதான் பெற்றிருந்தன. இதை ஒப்பிடுகையில், இந்தாண்டு தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 0.99 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

107 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: கல்மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி, வாதானூர் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி, கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, சுத்துகேணி அரசு உயர்நிலைப்பள்ளி, வில்லியனூர் பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைபுதுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வரிசிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி என புதுச்சேரியில் 7 அரசு பள்ளிகள்,காரைக்காலில் ஒரு அரசு பள்ளி என மொத்தம் 8 அரசு பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிள்ளைச்சாவடி ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளி மற்றும் புதுச்சேரியில் உள்ள 82 தனியார் பள்ளிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 107 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

553 மாணவர்கள் சென்டம்: புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் - 20, கணிதம் - 355, அறிவியல் - 77, சமூகவியல் - 101 என 553 பேர் பாடவரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் மாணவர்கள் அதிகளவில் சென்டம் எடுத்து அசத்தியுள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் கணிதம் - 15, அறிவியல் - 3, சமூக அறிவியல் - 4 என 22 பேர் சென்டம் எடுத்து சாதித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x