“கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்” - 10-ம் வகுப்பு முடிவுகள்: ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் வாழ்த்து  | படம்: ஜெ.மனோகரன்
முதல்வர் வாழ்த்து | படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியிருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், “10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றி பெற்று மேல்நிலை வகுப்புகளை நோக்கி நம்பிக்கையோடு நகரும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மன உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் உடனடித் தேர்வுகளை தவறாமல் எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முதல்வர் ஸ்டாலினின் #நான்_முதல்வன் போன்ற வழிகாட்டித் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் துறைகள் ஏராளமான வாய்ப்புகளுடன் உங்களுக்காக காத்திருக்கிறது. தேர்வு எழுதிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in