Published : 09 May 2024 05:53 AM
Last Updated : 09 May 2024 05:53 AM

மின் ரயிலை நெடுநேரம் நிறுத்தியதை கண்டித்து பயணிகள் மறியல்

சூலூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலை கொருக்குப்பேட்டையில் நீண்டநேரம் நிறுத்தியதால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: சரக்கு ரயிலுக்காக, மின்சார ரயிலை நெடுநேரமாக நிறுத்தி வைத்ததைக் கண்டித்து, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாள்தோறும் தாமதமாகச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு நேற்று காலை மின்சார ரயில் புறப்பட்டது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை 9.50 மணிக்கு அடைந்தது. அப்போது, இந்த ரயிலுக்கு சிக்னல் கொடுக்காமல், சரக்கு ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதால், 20 நிமிடத்துக்கும் மேலாக மின்சார ரயில் புறப்படாமல் நின்றது.

இதனால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் குவிந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மின்சார ரயில், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்தகொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸார், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கொருக்குப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் ஜெயக்குமார், இனிமேல் சிக்னல் பிரச்சினைஏற்படாமல் பார்த்து கொள்வதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தார். இதையடுத்து, முற்பகல் 11.25 மணிக்கு பயணிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் நெடுநேரம் ரயிலுக்காக காத்திருந்தனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள், பல இடங்களில் மற்ற ரயில்களுக்கு வழிவிடுவதற்காக சிக்னலில் நிறுத்தப்படுகின்றன, இதனால், நாள்தோறும் பல மணி நேரம் தாமதமாக பணிக்கு செல்ல நேருகிறது. இந்த பிரச்சினைக்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x