Published : 01 Apr 2018 11:33 AM
Last Updated : 01 Apr 2018 11:33 AM

காலக் கெடுவுக்குள் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு நாளை முறையீடு

உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கு மாறு உச்ச நீதிமன்றத்தில் நாளை கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர் பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின்படி 6 வார காலத்துக்குள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைக் கவில்லை.

முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த பிப்.22-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.

அதன்பிறகு மார்ச் 9-ம் தேதி மத்திய நீர்வளத் துறை செயலாளர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்ச் 15-ல் தமி ழக சட்டப்பேரவையில் மேலாண் மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு 3 கடிதங்களும் அனுப்பப்பட்டன. இதுதவிர, நாடாளுமன்றத்தை தமிழக எம்பிக்கள் 18 நாட்களாக முடக்கி போராட்டம் நடத்தினர். ஆனால், எதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.

இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன் றம் விதித்த 6 வார கெடு கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் அவமதித்து விட்ட தாக மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய கேபினட் செயலாளர் பி.கே.சின்ஹா, நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் ஆகியோருக்கு எதிராக தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சார்பில் வழக்கறிஞர் கே.வி.விஜயகுமார் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதற்காக 6 வார காலத்துக்குள் பிரத்யேக திட்டம் வகுக்க வேண் டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் இந்த 2 அதிகாரிகளும் வேண்டுமென்றே இந்த உத்தரவை நிறைவேற்றாமல் அவமதித்து விட்டனர். எனவே, அவர் கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி நீதியை நிலைநாட்ட வேண்டும். மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’ விடம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறும்போது, ‘‘இந்த அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நாளை முறை யீடு செய்ய உள்ளோம். தமிழக அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சுப்ரமணியம் பிரசாத், தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யவுள்ளார். இதில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதைப்பொறுத்து சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x