Published : 24 Apr 2018 08:45 AM
Last Updated : 24 Apr 2018 08:45 AM

நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சி: கவிஞர் வைரமுத்து குற்றச்சாட்டு

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை சிலர் திட்டமிட்டு திசை திருப்ப முயற்சி செய்கின்றனர் என கவிஞர் வைரமுத்து குற்றம் சாட்டினார்.

சென்னை புத்தக சங்கமம் சார்பில் உலக புத்தக நாள் விழா மற்றும் ‘புத்தகர்’ விருது வழங்கும் விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதாப் சிங், வீ.அரசு, லிங்கம் ஆகியோருக்கு ‘புத்தகர்’ விருது வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது: நம்மை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி சமூகத்தில் நடக்கிறது. எனவே, நம்முடைய அறிவை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. ஒரு பிரச்சினையை திசை திருப்புவதற்காக திட்டமிடப்படுவதை அறிவுலகமும் ஊடகங்களும் அறிந்துகொண்டால் நம் பிரச்சினையில் கூர்மை குறையாமல் இருக்கும்.

நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றை திசை திருப்ப நினைக்கின்றனர். இதற் காக தனி நபர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். இந்த மறைமுக உளவியல் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மூலப்பிரச்சினையை விட்டு சாதாரண பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆனால், எப்படி அவர்கள் திசை திருப்பினாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழர்கள் ஓய மாட்டார்கள். தமிழர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று மட்டும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x