Published : 29 Apr 2024 05:19 AM
Last Updated : 29 Apr 2024 05:19 AM
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறும். இதில் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுகளில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறன் ஊக்குவிக்கப்படும்.
இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு இன்று (ஏப்.29) முதல் மே 13-ம் தேதி வரை கால்பந்து, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், பயிற்சிக் கட்டணமாக சென்னையில் ரூ.500, இதர மாவட்டங்களில் ரூ.200 செலுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இம்முகாம்களில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் செயலை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT