Published : 24 Apr 2024 06:21 AM
Last Updated : 24 Apr 2024 06:21 AM

சம்பள மென்பொருளில் இருமடங்காக வந்த வருமான வரித் தொகை பிடித்தம்: தமிழக அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்காக உருவாக்கப்பட்ட ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில், வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை அதிகமாக காட்டப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழக அரசில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப்பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளான ‘ஐஎப்எச்ஆர்எம்எஸ்’ என்ற நிதித்துறையின் மென்பொருள் வாயிலாக தயாரிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு முதல் வருமான வரிப் பிடித்தமும் இந்த மென்பொருள் மூலம் கணக்கிட்டு பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட சம்பளப் பட்டியலில், அதிகளவில் வருமான வரிப்பிடித்தம் செய்யும் வகையில் தொகை குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்தாண்டு ரூ.40 ஆயிரம் வரி செலுத்தியிருந்தால், இந்தாண்டு சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் வரியை பிடித்தம் செய்யும் வகையில் அந்த மென்பொருள் கணித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலக சங்கம் சார்பில் அதன் தலைவர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நிதித்துறை செயலர் உதயசந்திரனிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வருமான வரி பிடித்தம் என்ற நடைமுறை இந்த மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில் பழைய நடைமுறை, புதிய நடைமுறை என தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு செய்யாதவர்களுக்கு புதியநடைமுறை அடிப்படையில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால், நடைமுறையில் அரசுஊழியர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில பணியாளர்களுக்கு வாங்கும் மாதாந்திர சம்பளத்தை விட அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யும் நிலை உள்ளது. வரிவிலக்கு உள்ள வீட்டுக்கடன் அசல், வட்டி உள்ளிட்டவற்றை பதிவேற்றும் வசதிகள் இந்த மென்பொருளில் இல்லை. வருமான வரி வரம்புக்குள் வராத அடிப்படை பணியாளர்களுக்கு கூட அதிகளவில் வரிப்பிடித்தம் செய்யப்படும் நிலை உள்ளது.

இதனால், தனிப்பட்ட வங்கிக் கடன்களை பணியாளர்கள் கட்ட இயலாத நிலை ஏற்படும். மேலும், வருமான வரிப் பிடித்தத்துக்கு அதிகமாக தற்போது மென்பொருள் மூலம் பிடித்தம் செய்யப்பட்டால், அந்த தொகையை திரும்ப பெற 2 ஆண்டுகள் வரை ஆகும். இதனால், பணியாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் உள்ளது.

எனவே, கடந்தாண்டு பணியாளர்கள் செலுத்திய தொகையை 10-ல் வகுத்து, அதையே இம்முறை பிடித்தம் செய்வதே சரியானது. எனவே, சரியான வரியை மட்டும் பிடித்தம் செய்து, சம்பளத்தை பணியாளர்கள் சிரமமின்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x