Published : 19 Apr 2024 05:40 AM
Last Updated : 19 Apr 2024 05:40 AM

சென்னை | 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பண: ஜூலைக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் ஒன்றான சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்களில் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, இந்த ரயில் நிலையங்களில் ஆர்.பி.எஃப். போலீஸார், தமிழக ரயில்வே போலீஸார் ஆகியோர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, பெண் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரயில் வழித்தடங்களில் ஆர்.பி.எஃப். படையினர் தொடர்ந்து ரோந்து சென்று வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்ட்ரல் - ஜோலார்பேட்டை, எழும்பூர் - விழுப்புரம் ஆகிய மார்க்கங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, சிசிடிவி கேமரா பொருத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத நிலையங்கள் உள்ளடக்கிய 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்டது. சுமார் ரூ.25 கோடியில் பணி மேற்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பணியை தற்போது விரிவுபடுத்தி, 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மூர் மார்க்கெட் வளாகம், மாம்பலம், சென்னை கடற்கரை, தாம்பரம், பேசின்பாலம், திருவள்ளூர், நுங்கம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், செங்கல்பட்டு, திருமயிலை, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் மற்றும் சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் 26 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் 17 நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது.

இதுதவிர, சென்னை - ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் - ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் 31 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இதுதவிர, 54 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை வரும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையத்தில் 10 சிசிடிவி கேமராக்கள் முதல் 25 சிசிடிவி கேமராக்கள் வரை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x