சிஎம்டிஏ அதிகாரிக்கு எதிரான தேர்தல் பிரச்சார புகார் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தகவல் @ ஐகோர்ட்

சிஎம்டிஏ அதிகாரிக்கு எதிரான தேர்தல் பிரச்சார புகார் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தகவல் @ ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) மக்கள் தொடர்பு அதிகாரி திவாகருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெயிலுமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகர். அரசு ஊழியராக இருந்து கொண்டு இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரம் குறித்த செய்தியை, நாடு முழுவதும் உள்ள 188 ஊடகங்களுக்கு தனது அலுவலக மின்னஞ்சல் முகவரியில் இருந்து அதிகாரி திவாகர் அனுப்பியுள்ளர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வமாலா மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in