Published : 17 Apr 2024 03:38 PM
Last Updated : 17 Apr 2024 03:38 PM

ஜோதிமணிக்கு சாதகமா, பாதகமா? - கரூர் தொகுதி கள நிலவர அலசல்

கரூர் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி களம் கண்டார். அப்போது அவர் 6,95,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை 2,75,151 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் லிஸ்டில் ஜோதிமணியும் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகுதியில் ஜோதிமணி மீண்டும் களம் காண்பதால் கரூர் தொகுதி முக்கிய களமாக மாறியுள்ளது.

போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்கள்: இம்முறை கரூரைக் கைப்பற்ற திமுக காய் நகர்த்தியது. ஆனால், காங்கிரஸ் தலைமையுடன் ஜோதிமணி நெருக்கமாக இருந்ததால் டெல்லியை சரிகட்டி கரூரைத் தக்கவைத்துக் கொண்டார். அவருக்காகத்தான் கரூரை மீண்டும் காங்கிரஸ் பெற்றது என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. எனவே, காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, அதிமுக சார்பாக கே.ஆர்.எல்.தங்கவேல், பாஜக சார்பாக செந்தில்நாதன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரெ.கருப்பையா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கடந்தமுறை ஜோதிமணி வென்றது எப்படி?: 2014-ம் ஆண்டு வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை என்னும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, ’நாடக மேடையைத் தாண்டி தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை’ என அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோதிமணி விமர்சித்தார். தொகுதி மக்களிடமும் அப்படியான அதிருப்தி நிலவியது. இந்த நிலையில், அத்தொகுதியில் மீண்டும் தம்பிதுரை களம் கண்டதால் அதிருப்தி வாக்குகள் ஜோதிமணிக்கு சாதகமாகிவிட்டன. மேலும், பாஜக எதிர்ப்பு அலை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜோதிமணியை வெல்ல வைத்தது.

2024-ம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - கடந்த முறை கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக அதிமுகவின் முக்கிய தலைவரான தம்பிதுரை போட்டியிட்ட நிலையில், இந்த வாக்கு வித்தியாத்தில் வெற்றியடைந்தது கவனிக்கத்தக்கது. ஆனால், இம்முறை களம் அவ்வளவு எளிதானதாக திமுக கூட்டணிக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.

எப்படி கடந்த முறை சிட்டிங் எம்பி தம்பிதுரை மீது அதிருப்தி நிலவியதோ, அதுபோல தற்போது ஜோதிமணி மீது நிலவுவதாகக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. தவிர, கொங்கு பெல்ட் என்பதால் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்கும் நல்ல வாக்கு வங்கி உள்ளது. கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் அதன் எதிர்ப்பு அலை அதிமுகவுக்குப் பின்னடைவானது. ஆனால், இம்முறை தனித்துப் போட்டியைச் சந்திப்பதால் அதிமுகவுக்குச் சாதகமான நிலை ஏற்படவே அதிகம் வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாதக அக்கட்சிக்கும் இருக்கும் வாக்கு வங்கியை நம்பி களத்தில் உள்ளனர்.

அதிமுக நிலை என்ன? - அதிமுகவில் களமிறக்கப்பட்டிருக்கும் தங்கவேல் அறிமுகம் இல்லாத வேட்பாளராகத்தான் இருக்கிறார். எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளராக இருந்த அவருக்கு மக்களவையில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இவரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி, விந்தியா, காயத்ரி ரகுராம் என பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தவிர, ஜோதிமணி மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் அதிமுகவுக்கு இருக்கும் பிரதானமான வாக்கு வங்கி ஆகியவற்றை நம்பி அவர் களத்தில் இருக்கிறார்.

பாஜக நிலை என்ன? - பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில்நாதன் அதிமுகவில் இருந்தவர்தான். 2011-ம் ஆண்டு அதிமுக சார்பாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் முக்கியமான பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் நட்டா இந்தத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். எனவே, இங்கு கணிசமான வாக்குகளை அறுவடை செய்யும் என்னும் நம்பிக்கையில் பாஜக இருக்கிறது.

நாதக நிலை என்ன? - கருப்பையா பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கடந்த பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அங்கு நாம் தமிழருக்கு உள்ள வாக்கு வங்கியை நம்பி களத்தில் நிற்கிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருப்பையாவை ஆதரித்து கரூர் புறநகர்ப் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

சிட்டிங் எம்பி ஜோதிமணி செயல்பாடு எப்படி இருந்தது? - அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டங்கள் அறிமுகம் செய்வதாக சொன்னார் ஜோதிமணி. ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் கட்டப்பட்ட பாலத்துக்கும் கூட காங்கிரஸ் - அதிமுக என இரு கட்சிகளும் சொந்தம் கொண்டாடுவதால் இவரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆனால், கட்சி மற்றும் தேசிய அளவில் ஜோதிமணி செயல்பாடுகள் நன்றாக இருந்திருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை பங்களிப்பு, நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தது என சில முக்கியமான பணிகளை அவர் செய்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக சில நடவடிக்கை மேற்கொண்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆகவே, தொகுதியில் அவருக்கு எதிரான சில நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவருக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அதையும் மீறி அவரின் தேசிய அளவிலான செயல்பாடுகள் உற்று நோக்கப்பட்டுதான் காங்கிரஸ் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

காங்கிரஸ் வியூகம் என்ன? - திமுக கூட்டணியில் கரூரின் சிட்டிங் எம்பியான ஜோதிமணி காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், பெண் என்னும் அடிப்படையில் எதிர்ப்புகளை மீறி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவருக்கு ஆதரவாக முதன்முதலில் கரூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கரூருக்கு நேரடியாக வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. நாமக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் இவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார்.

அதேபோல், தொகுதியில் தேர்தல் பணிமனை திறந்து வைக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகை தந்திருந்தார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினும் இவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இறுதியாகக் கோவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இவருக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கடந்த முறை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜோதிமணி. ஆனால், ஏற்கனவே காங்கிரஸ் மீது நிலவும் இந்த அதிருப்தி வாக்குகளைச் சிதறச் செய்யும். சென்றமுறை போல பாஜகவுக்கான தீவிர எதிர்ப்பலை களத்தில் இல்லை. ஆகவே, அதிக வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைக்குமா என்பது கேள்விதான். இருப்பினும், வாக்குகள் குறைந்துவிடக் கூடாது என்பதில் திமுக காங்கிரஸ் என இரு கட்சிகளும் தீவிரமாகவுள்ளது. அதனால்தான், ஜோதிமணியை 5 லட்சம் வாக்குகள் மேல் பெற்று வெல்ல வைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் பேசினார்.

கரூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை ஜோதிமணிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த முறை கிடைத்த வாக்கு சதவீதம் இம்முறை கிடைப்பது கடினம்தான். குறிப்பாக, அதிமுக, பாஜக வேட்பாளர் டஃப் பைட் கொடுப்பார்கள் என்னும் நிலவரம் தான் கரூர் களம் நமக்கு தெரியப்படுத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x