Published : 24 Apr 2018 08:36 AM
Last Updated : 24 Apr 2018 08:36 AM

பாஜக ஏஜென்ட்டாக செயல்படுகிறது அதிமுக: இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சனம்

பாஜகவின் ஏஜென்ட்டைப் போல அதிமுக செயல்படுவதாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை வெங்கய்யா நாயுடு நிராகரித்தது எதிர்பார்த்ததுதான் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார்.

சுதாகர் ரெட்டி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுகின்றன. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதுவே அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக காட்டிவிட்டது. இவ்விரு கட்சிகளும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளைப் போல செயல்படுகின்றன.

உண்மையிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு வலியுறுத்துகிறது என்றால், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் இந்த பிரச்சினையை கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவுக்கு மூன்றாம் தர ஏஜென்ட்டாக செயல்படுவதை அதிமுக வெளிப்படுத்தி விட்டது.

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநரே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானத்தை குடியரசு துணைத் தலைவர் அவசரப்பட்டு நிராகரித்து விட்டார். ஆனால் இது எதிர்பார்த்ததுதான். சட்டம் தெரிந்த அவரே, இதுதொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்காமல் அவசரமாக முடிவு செய்துள்ளார்.

பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க சட்டம் கொண்டு வந்திருப்பதன் மூலம், சாட்சியங்களை மறைக்க பெண்கள் கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக பெண்கள் நல அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. எனவே அரசு சட்டம் கொண்டுவரும் முன்பாக பெண்கள் அமைப்புகளுடன் ஆலோசித்து இருக்கலாம். கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. இவ்வாறு சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x