Last Updated : 16 Apr, 2024 05:51 PM

 

Published : 16 Apr 2024 05:51 PM
Last Updated : 16 Apr 2024 05:51 PM

விருதுநகரில் வாக்காளர்களுக்கு தாம்பூலத்துடன் தேர்தல் திருவிழா அழைப்பு

வாக்காளர்களுக்கு தாம்பூலத்துடன் தேர்தல் திருவிழா அழைப்பு

விருதுநகர்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தாம்பூலத்துடன் தேர்தல் திருவிழா அழைப்பு கொடுக்கப்பட்டது. அதோடு, தேர்தல் நாளான 19-ஆம் தேதி பிறந்தநாள் கொண்ட இளம் வாக்காளர்கள் விருதுநகரில் இன்று கேக் வெட்டி கொண்டாடினர்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை நரிக்குறவர் காலனியில் 100 வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பூலத்துடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்குடன், ‘தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா’ அழைப்பிதழ்களை அப்பகுதியில் வசிக்கும் 54 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி, ஏப்ரல்-19 அன்று குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்திய தேர்தல் ஆணைய சின்னத்துடன் ‘தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா’ மக்களவைத் தேர்தல் 2024 என்ற முகப்பு வாசகங்களுடன் பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில்,“விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ். அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் (19.4.2024) வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது.

நாள்- 19.04.2024 நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், இந்திய தேர்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலிகள் குறித்த விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 04562-252100, 04562-221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளர் சேவை மையம் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து, தேர்தல் நாளான ஏப்ரல்-19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் 30 பேர் கலந்துகொண்டு “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட லச்சினை வரையப்பட்ட கேக் வெட்டி மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x