Published : 16 Apr 2024 01:20 PM
Last Updated : 16 Apr 2024 01:20 PM

“பாஜக ஆட்சியில் தமிழக மக்கள் அடைந்த பயன் என்ன?” - செல்வப்பெருந்தகை கேள்வி

செல்வப்பெருந்தகை

சென்னை: கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் விரோத பாஜக ஆட்சியில் ஏதாவது ஒரு பயனை தமிழக மக்கள் அடைந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியும், பாஜகவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வடமாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார்.

ஆனால், 100 முறை தமிழகத்துக்கு வந்தாலும் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்புக்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இதன்மூலம் தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு இலங்கை அரசோடு செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி திரும்பத் திரும்ப பேசி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் தலைமை வழக்கறிஞர் பாஜக ஆட்சி அமைந்தவுடனேயே 2014 இல் ‘கச்சத்தீவு முடிந்து போன விஷயம், அதை மீட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை மீட்க வேண்டுமென்றால் இலங்கையோடு போர் தொடுத்து தான் மீட்க முடியும்’ என கூறியதை எவரும் மறுத்திட இயலாது.

அதேபோல அன்றைய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியும் இலங்கை உட்பட யாருக்கும் வழங்கப்படவில்லை. கச்சதீவு என்பது ஏற்கெனவே ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்டு விட்டது. அதை மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கிற நிலையில் ஒன்றிய அரசு இல்லை” என்று பதில் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியதை அவரே இன்று திரித்து பேசுகிறார்.

இந்நிலையில் தமிழக மக்களையும், மீனவர்களையும் ஏமாற்றுவதற்கு பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து கபட நாடகமாடுகிறார். சில நாட்களுக்கு முன்பு இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசு இலங்கை அரசோடு ஒருமுறை கூட கச்சத்தீவு பற்றி பேசியதில்லை” என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். எனவே, மோடியின் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.

கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் விரோத பாஜக ஆட்சியில் ஏதாவது ஒரு பயனை தமிழ்நாட்டு மக்கள் அடைந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியும், பாஜகவும் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் பத்திர நன்கொடை மூலம் திரட்டிய பெரும் தொகையின் மூலமாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 26.74 லட்சம் கோடி. அதேபோல, மக்கள் மீது விதிக்கப்பட்ட பலமுனை ஜி.எஸ்.டி. வரியின் மூலமாக ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 31.25 லட்சம் கோடி. இரண்டையும் சேர்த்தால் ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 58 லட்சம் கோடி.

இத்தகைய வருமானங்கள் ஏழை எளிய மக்கள் மீது விதிக்கப்படுகிற கொடூரமான மறைமுக வரியால் மனிதாபிமானமே இல்லாமல் ஒன்றிய அரசு வரி விதித்து வருவாயை பெருக்கி கொண்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு வரி பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டி வருகிறது.

சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையில் 25 கோடி மக்கள் தொகை கொண்ட தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 722 கோடி. ஆனால், 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 816 கோடி. இதன்படி மொத்த வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு 10 சதவிகிதமும், உத்தரபிரதேசத்திற்கு 18 சதவிகிதமும் பாரபட்சமாக நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்தை நயவஞ்சகத்தோடு நிதி பகிர்வில் வஞ்சிக்கலாமா ? அதேபோல ஜி.எஸ்.டி. வரி யாரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது ? மொத்த வசூலில் 64 சதவிகித ஜி.எஸ்.டி. வரி 50 சதவிகித மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. ஆனால் 10 சதவிகித மேல்தட்டு மக்களிடமிருந்து 4 சதவிகித வரி தான் வசூலிக்கப்படுகிறது.

ஒன்றிய பாஜக அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய கடன் தொகையை கடந்த 9 ஆண்டுகளில் ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது. இதில் பெரும் தொழிலதிபர்களின் கடன் தொகை ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய கடன் சலுகை காரணமாகத் தான் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடையாக ரூபாய் 8,000 கோடி பெற்று பிரதமர் நரேந்திர மோடி வசூல் ராஜாவாக செயல்பட்டிருக்கிறார்.

ஆனால், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்போ, கடன் நிவாரணமோ அளிக்க தயாராக இல்லை. 2022 நிலவரப்படி ரூபாய் 23 லட்சத்து 44 ஆயிரம் கோடி விவசாயிகளின் கடன் உயர்ந்திருக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் பெரும் கடன் சுமையோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுவதற்கு மோடி அரசு தான் பொறுப்பாகும்.

தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் பாரதியார், திருவள்ளுவர் மற்றும் தமிழ் மொழி மீது பிரதமர் மோடி பாசத்தை பொழிகிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல், பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு நிதியை வாரி வழங்குகிற பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பெருந்தலைவர் காமராஜரை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் சாலையில் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதலில் இன்றைய பாஜகவின் தாய் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கத்திற்கு பங்கு இல்லை என்று பாஜகவால் மறுக்க முடியுமா ? எனவே, காமராஜர் பெயரை உச்சரிக்க மோடி உட்பட எந்த பாஜகவினருக்கும் அருகதை கிடையாது.

தமிழ்நாடு தற்போது போதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மோடி கூறுகிறார். ஆனால், இந்தியாவிலேயே போதையின் தலைநகரமாக மோடியின் குஜராத் மாநிலம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 2017-21 வரை உள்ள ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 2.5 லட்சம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் ரூபாய் 21,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசோ, குஜராத் மாநில அரசோ என்ன நடவடிக்கை எடுத்தது?

இந்நிலையில் தமிழகத்தில் போதை பொருட்கள் பரவலை தடுக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி செயல்படும் தமிழக அரசை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, பத்து ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x