Published : 08 Apr 2024 07:08 AM
Last Updated : 08 Apr 2024 07:08 AM

பாஜக வேட்பாளர்களின் இடங்களில் சோதனையிட வேண்டும்: சத்யபிரத சாஹுவுக்கு திமுக, காங்கிரஸ் வலியுறுத்தல்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட பணம்.

சென்னை: பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் சொந்தமான இடங்களில் சோதனையிட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது: ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையை எடுத்துச்சென்ற சதீஷ் மற்றும் இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது சதீஷ், திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் புளூ டைமண்ட் ஓட்டல் மேலாளர் என்பதும், நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக திருநெல்வேலி வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக நயினார் நாகேந்திரன் பல கோடி தொகையை ரகசிய இடங்களில் வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, நயினார் நாகேந்திரன் உட்பட அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கடிதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகஹுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.

எனவே நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்கு செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துவதோடு அவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்: இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாகும். இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x