Published : 16 Apr 2024 10:40 AM
Last Updated : 16 Apr 2024 10:40 AM

“ஜனநாயகமா, சர்வாதிகாரமா? என தீர்மானிக்கும் தேர்தல்” - முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று, வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டை ஆளப்போவது ஜனநாயகமா, சர்வாதிகாரமா, ஆர்எஸ்எஸ் சித்தாந்தமா, அம்பேத்கரின் அரசியல் சாசனமா என்பதை முடிவு செய்யும் முக்கியமான தேர்தல். மக்கள் கவனமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டியை எதிர்த்துவிட்டு, பிரதமரான பிறகு ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு போன்றவற்றை அமல்படுத்தி மக்களை வதைத்து, எம்எஸ்எம்இ தொழில்களை நசுக்கியவர் தான் மோடி. பாஜகவும், மோடியும் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாட்டின் தென்பகுதியான தமிழகத்தின் குரல் ஒலித்திருக்கிறது. ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், நீட் தேர்வு ரத்து, மத்திய அரசுப் பணிகளில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையிலும் சென்னையில் 3-வது ரயில் முனையம், கோயம்பேடு முதல் அம்பத்தூர் வரை, விம்கோ நகர் முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு, மணலியில் இஎஸ்ஐ மருத்துவமனை என ஏராளமான மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் பாஜக 10 ஆண்டு ஆட்சியின் சாதனையாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. வருங்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என அவர்களின் தேர்தல் அறிக்கையில் சரியான எந்த வாக்குறுதியும் இல்லை. திமுக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், பாஜக தேர்தல் அறிக்கை வில்லன்.

திமுக ஆட்சியில் விடியல் பயண திட்டம், புதுமைப் பெண், தோழி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வட சென்னைக்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியில் 11 அரசுத் துறைகள் மூலம் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழக உரிமைகளை அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்தினார்.

3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஆதரித்து, அவற்றால் யாருக்கும் பாதிப்பில்லை என்றார். விவசாயிகளை முகவர்கள் என்றும் இழிவுபடுத்தினார். நான் பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் எல்லாம் இளைஞர்கள், மகளிர் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. மோடியையும், பழனிசாமியையும் வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x