Published : 15 Apr 2024 05:19 PM
Last Updated : 15 Apr 2024 05:19 PM

“சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பாஜக உளவியல் அச்சுறுத்தல்” - வேல்முருகன் குற்றச்சாட்டு

தொல்.திருமாவளன், வேல்முருகன் | கோப்புப் படங்கள்.

சென்னை: “திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித் துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாசிச பாஜக.- ஆர்எஸ்எஸ். கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்காக எல்லாவிதமான சதிச்செயல்களையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றி வருகிறது.

குறிப்பாக, பாஜக தலைமையிலான மோடி அரசு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, நீதிமன்றங்களின் மூலமாக, எதிர்க்கட்சியினரை அடிபணிய வைத்து விடலாம் என எண்ணுகிறது. அந்த வகையில், பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சகோதரர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருக்கிறது. அதோடு, திருமாவளவனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொண்டு வந்த திமுக நிர்வாகிகள் வீடுகளிலும், வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்து வரும் நிலையில், அவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ இப்படியாக சோதனை நடத்தவில்லை. ஆனால், திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது.

வருமான வரித் துறை சோதனையின் வாயிலாக, அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது. தோல்வி பயத்தில் இருக்கும் பாசிசக் கும்பல், அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கை இழந்து, வெறிபிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது. அப்படி தான், திருமாவளவனை அச்சுறுத்தி பார்க்க நினைக்கிறது.

மோடி, ஆர்எஸ்எஸ் கும்பல் கடந்த 10 ஆண்டுகளில், அரங்கேற்றியிருப்பது பாசிச பயங்கரவாதம். இதனை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். எனவே, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனை சதித்திட்டத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என்ற பாசிச சக்திகளின் கனவு ஒரு போதும் ஈடேறாது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச சக்திகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x