Published : 02 Apr 2018 07:45 AM
Last Updated : 02 Apr 2018 07:45 AM

இரண்டாம் உலகப் போரின்போது திரிகோணமலை கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு: 74 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் போர் விமான குண்டு வீச்சால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து பயணிகள் கப்பல் 74 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையின் திரிகோணமலை கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகம் இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால் இந்த துறைமுகத்தை கைப்பற்ற பல யுத்தங்கள் நடந்துள்ளன. சோழர்கள், போர்த்துகீசியர், நெதர்லாந்து, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் திரிகோணமலை துறைமுகம் இருந்துள்ளது.

2009-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு திரிகோணமலை துறைமுகத்தை மேம்படுத்த அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்துறைமுகத்தின் விரிவாக்கப் பணியில் இலங்கை கடற்படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதில், கடலில் மூழ்கியிருந்த இங்கிலாந்துக்குச் சொந்தமான எஸ்.எஸ். சகாயிங் பயணிகள் கப்பலை மீட்டுள்ளனர்.

1944-ம் ஆண்டு 2-ம் உலகப் போரின்போது திரிகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றிருந்த எஸ்.எஸ். சகாயிங் பயணிகள் கப்பலை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று குண்டு வீசி கடலில் மூழ்கடித்தது.

கடலில் 35 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த கப்பலை மீட்கும் பணியை இலங்கை கடற்படையினர் 2017-ல் தொடங்கினர். 170 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (மார்ச் 31) அந்தக் கப்பலை கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட எஸ்.எஸ்.சகாயிங் பயணிகள் கப்பல் இங்கிலாந்தில் கட்டப்பட்டு 1924-ல் தனது முதல் பயணத்தை தொடங்கியது. 452 அடி நீளமுள்ள இந்த கப்பல் விரைவில் திரிகோணமலை துறைமுக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x