Published : 14 Apr 2024 06:20 PM
Last Updated : 14 Apr 2024 06:20 PM

ராமநாதபுரம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் - நவாஸ் கனி தேர்தல் அறிக்கை அம்சங்கள்

ராமநாதபுரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, தனது தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் வேட்பாளர் நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்து தொடர்ந்து உழைத்த நான், வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது ஆளுங்கட்சியாக அமர்ந்து தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக் காகவும் பாடுபடுவேன்.

எனது சொந்த நிதியிலிருந்து ஆண்டுக்கு 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது, விவசா யம், தொழில் துறை மற்றும் சேவை துறையில் பல திட்டங்களை கொண்டு வந்து அரசு மற்றும் தனியார் பங்களிப் போடு வேலையின்மை பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுக்கப்படும். கச்சத் தீவை மீட்கவும் அல்லது கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் வகையில் நிரந்தர குத்தகைக்கு எடுக்கவும் கடும் முயற்சி எடுக்கப்படும்.

சேது சமுத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும், ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து, ராமநாதபுரத்தில் விமான நிலையம், சரக்கு விமான முனையம் அமைய முயற்சிப்பேன். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கனவு திட்டமான ஆழ்கடல் மீன்பிடி பூங்கா அமைத்து அதிக மீன் ஏற்று மதிக்கான கப்பலை நிறுவவும், அறிவுசார் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x